கள்ளக்குறிச்சி சஸ்பெண்ட் எஸ்பிக்கு தாம்பரத்தில் போஸ்டிங்.. ஐகோர்டில் அதிமுக, பாமக கடும் எதிர்ப்பு
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் தொடர்பாக விவகாரத்தில் அம்மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றி சமய் சிங் மீனா, தற்போது சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மற்றும் பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தன . சமய் சிங் மீனாவுக்கு எதிரான விசாரணை முடிவு குறித்த சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளன.
கள்ளக்குறிச்சி நகரில் கள்ள சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 60க்கும் மேற்றபட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அடுத்து இறந்து போனார்கள். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஷ்ரவன் குமாருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டார். இதேபோல் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கையை அரசு அப்போது எடுத்தது. அதோடு சமய் சிங் மீனாவுக்கு பதிலாக புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டார். இதுதவிர மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தமோதரன், இவரது மனைவி சந்திரா உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்க விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சிபிசிஐடி விசாரிக்கம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து வருகிறது.
அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதிடுகையில் "வருடம் தோறும் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவதைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை. உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் இல்லை.
1998-ம் ஆண்டு ஓசூரில் விஷ சாராயம் குடித்து 100 பேர் பலியான வழக்கில் 16 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த சம்பவத்துக்கு பிறகு, காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி, மெத்தனால் எங்கிருந்து வருகிறது? என்பதைக் கண்டறிந்து, தடுத்திருந்தால், தற்போது 68 பேர் இறந்ததை தடுத்திருக்க முடியும்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவுக்கு எதிராக என்ன விசாரணை நடத்தப்பட்டது? அவர் தற்போது தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் போலீஸ் ஸ்டேசன் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லை. மேலும், மெத்தனால் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வந்திருப்பதாகக் கூறப்படுவதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட வேண்டியது அவசியம்" என்று வாதிட்டார்-
இதற்கு பதிலளித்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழ்நாட்டிற்கு மெத்தனால் எங்கிருந்து வருகிறது என்பதை போலீசார் கண்டுபிடித்து, அதனை தடுத்துள்ளார்கள். இந்த விஷயம் ரகசியமானவை. புலன் விசாரணை அதிகாரியின் ரகசிய அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
பாமக வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, "ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. எனவே அரிதான வழக்காகக் கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அரசே காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இதிலிருந்து காவல்துறைக்கும் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது தெளிவாகிறது. அதனால் சுதந்திரமான அமைப்பே இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சமய் சிங் மீனா மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.. அவருக்கு எதிரான விசாரணை முடிவுகளை அரசு வெளியிடவில்லை. கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்படுவதால், இதுகுறித்து சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்," இவ்வாறு என்.எல்.ராஜா வாதிட்டார். இதையடுத்து அரசுத் தரப்பு பதில் வாதங்களுக்காக விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்றைக்குஅரசு இந்த வாதங்களுக்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications