அதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்ட ஜிகே வாசன்.. மறுக்காமல் அமைதி காத்த எடப்பாடி பழனிசாமி!
கோவை: அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், 2026 சட்டசபைத் தொகுதிகளில் தமாகாவுக்கு 12 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, மறுப்பு சொல்லாமல் ஜிகே வாசனிடம் பதில் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், என்டிஏ கூட்டணி கூடிய விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. பீகார் தேர்தல் முடிவடைந்துவிட்ட சூழலில், பாஜகவின் கவனம் தமிழ்நாடு பக்கம் திரும்பி உள்ளது. தற்போது வரை என்டிஏ கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன.

டிசம்பர் மாதத்தில் என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான டிரைய்லர் போல் பிரதமர் மோடியின் விசிட் அமைந்துள்ளது. ஏனென்றால் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமியோடு, தமாகா தலைவர் ஜிகே வாசன் மற்றும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இதனால் விரைவில் இந்தக் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக என்டிஏ கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்தார். அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜிகே வாசன் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் வரை தனியாக ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். அப்போது ஜிகே வாசன் தரப்பில், கடந்த தேர்தல் முதலே அதிமுக மற்றும் பாஜகவுடன் தமாகா தொடர்ந்து நட்புடன் இருப்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். அதேபோல் கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இம்முறை கூடுதலாக 6 தொகுதிகள் என்று 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் 4 மண்டலங்களிலும் தமாகா வளர வேண்டும் என்பதை கணக்கிட்டு ஜிகே வாசன் முனைப்புடன் செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனை கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, எந்த மறுப்பும் கூறாமல் நிதானமாக ஜிகே வாசனின் வார்த்தைகளை மட்டும் காதில் வாங்கி கொண்டுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. இதனால் இம்முறை தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே இன்றைய நிகழ்ச்சியின் போதும் எடப்பாடி பழனிசாமி - ஜிகே வாசன் இணைந்து பிரதமர் மோடியை சந்தித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications