அதிமுக-பாஜக கூட்டணி பிரிவு.. நிஜம்தானா? அரசியல் நாடகமா?
சென்னை: பாஜக தலைவர் பதவி வெங்காயம் மாதிரி என்றார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நீங்கள் நினைத்தபடியே அதிமுக நடந்து கொண்டது என்று தொண்டர்களிடையே பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது என்றார் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி.
அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவை அறிவித்த அடுத்த சில நாட்களில் முக்கிய தலைவர்களின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் இவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இவர்கள் பேச்சுக்கள் இருப்பதை சற்று உற்று நோக்கினாலே புரிந்துகொள்ள முடியும்.

அதிமுக-பாஜக கூட்டணி உண்மையிலேயே உடைந்துள்ளதா அல்லது, அரசியல் நாடகம் அரங்கேறுகிறதா என்பது தமிழ்நாட்டு டீக்கடைகளில் மற்றும் சலூன் கடைகளில் பேசுபொருளாகியுள்ளது. இந்த சந்தேகம் வர மூல காரணமே கூட்டணி உடைவதற்கான எந்த பெரிய காரணமும் இல்லாததுதான்.
அதிமுக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என பாஜக தரப்பில் சிலர் அழைத்தது தொடங்கி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாஜக தலைவர்கள் அவதூறாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு பின்பும்கூட, சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் முதல் வரிசையில் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கியபடி புன்னகையோடு நின்றிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அறிஞர் அண்ணாவை அவமானப்படுத்தி விட்டார்கள் என்பதால் கூட்டணி முறிகிறது என்று யாராவது சொன்னால் அண்ணாவே எழுந்து வந்து சிரிப்பார். பாஜகவிற்காக பல சமரசங்களை செய்து அண்ணாவின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சியை கண்டுகொள்ளாமல் விட்ட கட்சி அதிமுக என்ற விமர்சனம் திமுகவால் வைக்கப்பட்டு வருகிறது.அதிமுக தரப்பு சொன்ன எந்த காரணத்தையும் அண்ணா திமுக தொண்டர்கள் கூட நம்ப தயாராக இல்லை. அப்படியானால் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் இருக்க முடியும்.
மொத்தமே இரு காரணங்கள்தான் என்கிறார்கள் தமிழ்நாடு அரசியல் பார்வையாளர்கள். செப்டம்பர் 14ம் தேதி டெல்லியில் பூட்டிய அறைக்குள் நடந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையேயான சந்திப்பு ஒரு காரணம் என்றால், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்னொரு காரணம்.
அமித்ஷா-எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பின்போது 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கேட்டதும் எடப்பாடி பழனிச்சாமி கிட்டத்தட்ட மயக்கமடைந்துவிட்ட நிலைக்கே போய்விட்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி, தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் என எதிலுமே பாஜக தனித்து வெற்றி பெறும் நிலையில் இல்லை. ஆனால் அமித்ஷா எடப்பாடியிடம் ரொம்பவே சீரியசாக இந்த கோரிக்கையை முன்வைத்தார் என்று மீடியா ரிப்போர்ட்கள் தெரிவித்தன. அப்போதே பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தர எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அடுத்ததாக, பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் ஒரு காரணம். எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக நான் எப்படி அழைப்பேன்? என்று நிருபர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார் அண்ணாமலை. மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அதிமுக சொல்ல வேண்டும் ஆனால் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய மாட்டோம் என்பது அண்ணாமலை தரப்பு பேட்டியின் சாராம்சம்.

இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் பார்வையாளரான பிரியன் "ஒன்இந்தியா தமிழிடம்" பேசுகையில், அமித் ஷா - எடப்பாடி இடையேயான சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகாத வரை கூட்டணி உடைந்தது ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்காது என்கிறார். அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிச்சாமி சந்திப்புதான் இத்தனை விஷயங்களுக்கும் காரணம் என்கிறார் பிரியன். நடப்பது நாடகமா அல்லது உண்மையான பிரிவா என்பதை அமித்ஷா-எடப்பாடி சந்திப்பு அஜெண்டா என்ன என்பதை வைத்து புரிந்துகொள்ள முடியும். அதுவரை இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும் என்று உறுதியாக சொல்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications