அதிமுக- பாஜக கூட்டணியில் மாற்றம்? எடப்பாடி பழனிசாமி நறுக்.. விஜய் பற்றி சொன்ன பாயிண்டு முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்குச் சுமார் 10 மாதங்கள் இருந்தாலும் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதற்கிடையே பாஜக உடனான கூட்டணி, விஜய் அரசியல், தமிழ்நாடு அரசியல் களம் குறித்து எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருந்தாலும் இப்போதே அனைத்துக் கட்சிகளுமே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

கூட்டணியில் மாற்றம்
இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பாஜக அதிமுக கூட்டணியில் வரும் காலங்களில் மேலும் பல கட்சிகள் இணையும் என அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பாஜகவுடனான எங்கள் கூட்டணியில் அடுத்த எட்டு மாதங்களில் மாற்றங்கள் வரும். எங்கள் கூட்டணியில் வரும் மாதங்களில் பல கட்சிகள் சேரும், அது அதிமுகவின் தலைமையின் கீழ் இருக்கும். இது ஒரு வலுவான கூட்டணியாக இருக்கும்" என்றார்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தது. இரு ஆண்டுகள் இரு கட்சியும் தனித்தனியாகவே செயல்பட்டு வந்தன. இந்தச் சூழலில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணியை அமைத்துள்ளன. தேர்தலுக்கு கிட்டதட்ட 10 மாதங்கள் இருக்கும் சூழலில், அதிமுகவுக்கு இப்போதே மக்கள் ஆதரவு அதிகமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதிமுக தான் ஆட்சிக்கு வரும்
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "மக்கள் பெருமளவில் பிரச்சாரத்திற்கு வந்தனர். இது வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதையே பிரதிபலிப்பதாக இருந்தது. அடுத்தாண்டு அதிமுக நிச்சயம் மீண்டும் ஆட்சிக்கு வரும். அதுதான் மக்களின் விருப்பம். இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் தெளிவானது. மக்களை நேரடியாகச் சென்றடைவதே இதன் நோக்கம். இதில் என்னால் முடிந்தவரை அதிகபட்ச மக்களைச் சந்திக்கவுள்ளேன். நான் மக்களிடம் நேரடியாகச் செல்வேன்" என்றார்.
ஸ்டாலின் மீது பாய்ச்சல்
தொடர்ந்து திமுகவைக் கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலினுக்கு தன் கட்சியின் பலத்தையே நம்பவில்லை. அவர் முற்றிலும் தனது கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பியுள்ளார். அதிமுக அப்படி இல்லை. எங்கள் கட்சிக்குத் தமிழ்நாட்டில் வலுவான ஒரு கட்டமைப்பு இருக்கிறது
திமுகவின் நலத்திட்டங்கள் என்பது பொய்யான விஷயம். அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் கேள்வி எழுப்பிய பின்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அப்போதும், அவர்கள் பயனாளிகளின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைத்தனர். அதேநேரம் கடந்த காலங்களில் அதிமுக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. எங்கள் தலைவர்கள் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்றினர்
திமுக இதுவரை எந்தத் தமிழ் நலனுக்காகப் போரிட்டு இருக்கிறது? அவர்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளனர். மொழித் திணிப்பு பிரச்சினைக்குக் காரணமே அந்தக் கட்சிதான். அது அவர்களின் இரட்டை நிலையை வெளிப்படுத்துகிறது" என்றார்.
விஜய் அரசியல்
விஜய் கட்சி குறித்துப் பேசிய அவர், "கட்சி தொடங்குவது அவருடைய விருப்பம். அவர் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகக் கூறுகிறார் - அது ஒரு நல்ல விஷயம். ஆனால் அவர் இப்போதுதான் ஆரம்பித்துள்ளார். அவர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications