"53 ஆண்டுகால கட்சி பணியில் இருந்து விலகுகிறேன்” பாஜக கூட்டணியால் ஷாக் முடிவை எடுத்த அதிமுக நிர்வாகி!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாரிகள், பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டு விலகி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில், மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகி தனி அணி அமைத்த அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிமுக நிர்வாகி விலகல்
பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதை அதிமுக நிர்வாகிகள் பலரும் வரவேற்கவில்லை. இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்ததைக் கண்டித்து, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நாகை மாவட்டம் தெத்தி ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன்.
சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதிமுக கிளை செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கனத்த இதயத்தோடு விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கே.எஸ். முகமது கனி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு ஆலங்குடி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் முகமது கனி. அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்து இருப்பதை ஏற்க மறுத்து, முகமது கனி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜபாஸ்கருக்கு பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ளார். அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததோடு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழக வளர்ச்சிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்த பாஜவோடு அதிமுக கூட்டணி வைத்ததில் உடன்பாடு இல்லாததால் ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
கூட்டணியால் குழப்பம்
திருப்பூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், பாஜக உடன் கூட்டணி அமைத்தது பற்றி வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதேபோல, முன்னாள் கவுன்சிலர் கண்ணையனும், அதிமுக - பாஜக உடன் கூட்டணி அமைத்தது பற்றி கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், "பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுகவுக்கு வேலை பார்க்க முடியாது என இஸ்லாமிய சகோதரர்கள் கூறினார்கள்.
இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம். அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும். கூட்டணி வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள். தாமரைக்கு ஒட்டு போட கூட உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம்" எனப் பேசினார். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன், அவரது இந்தப் பேச்சை தவிர்க்குமாறு சைகை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications