ஆட்டம் க்ளோஸ்! அதிமுக + பாஜக கூட்டணி வைத்தால் 2024லும் தோல்விதான்? பரபர கருத்து கணிப்பு முடிவு
சென்னை: அதிமுக + பாஜக கூட்டணி தொடர்ந்தால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? அவர்களுக்கு வாக்களிப்பீர்களா? என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஒன்இந்தியா தமிழ் சார்பாக நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மக்கள் சுவாரசியமான பதில்களை அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த வியூகங்கள் இப்போதே விவாதங்கப்பட தொடங்கி உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது.
சூரிய ஒளியில் கரையும் ஐஸ் கட்டி போல ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் நயினார் நாகேந்திரன் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்ததால் பாஜக - அதிமுக கூட்டணியும் உடைந்தது.

எடப்பாடி பழனிசாமி
அதன்பின் கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தது என்னவோ எடப்பாடி பழனிசாமிதான். 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம். நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

காங்கிரஸ் கூட்டணி
ஆனால் எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி என்பது பாஜகவுடன் வைக்கும் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் வைக்கும் கூட்டணி என்று செய்திகள் வந்தன. அதாவது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை எடப்பாடி கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. முக்கியமாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி ஆலோசனை செய்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக இருக்கும் ஒருவர்.. முன்பு எடப்பாடிக்கும் ஆலோசகராக இருந்தார். இப்போதும் எடப்பாடிக்கு அவர் நெருங்கிய நட்பில்தான் இருக்கிறார். அந்த ஆலோசகர்தான்.. நீங்க பாஜகவை விட்டுட்டு வாங்க.. காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று கூறி இருக்கிறாராம்.

பாஜக விடாது
அதே சமயம் பாஜக அதிமுக கூட்டணியை உடைக்க விடாது. அடுத்த தேர்தலில் எப்படியுடன் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக நினைக்கும். இதனால் கண்டிப்பாக அதிமுக காங்கிரசுடன் செல்வதை பாஜக விடாது. இன்னொரு பக்கம் அதிமுகவில் வலிமையான தலைவர் உருவாவதை பாஜக விரும்பவில்லை. ஜெயலலிதா போல இன்னொரு தலைவர் உருவாவதை பாஜக விரும்பவில்லை. அதிமுக இரட்டை தலைமையால் வலிமை இழக்க வேண்டும். காலப்போக்கில் அதிமுக மரணிக்க வேண்டும். அந்த இடத்தில் பாஜக வர வேண்டும். இதுதான் பாஜகவின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் மணி உள்ளிட்ட பல அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி
இந்த நிலையில்தான் அதிமுக + பாஜக கூட்டணி தொடர்ந்தால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? அவர்களுக்கு வாக்களிப்பீர்களா? என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஒன்இந்தியா தமிழ் சார்பாக இதற்காக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில், 22.39% பேர் மட்டுமே அதிமுக + பாஜக கூட்டணி லோக்சபா தேர்தலில் வெல்லும் என்று கூறி உள்ளனர். 77.61% பேர் அதிமுக + பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளனர். அதாவது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடும் பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தோல்வி
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அதிமுக + பாஜக கூட்டணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் 2024 தேர்தலிலும் இவர்களின் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று 77.61% பேர் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து எடப்பாடி என்ன முடிவு எடுப்பார்? பாஜக கூட்டணியில் அதிமுக தொடருவதை விரும்புவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதை பாஜக வேடிக்கை பார்க்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications