எடப்பாடியை நோக்கி ‘இரட்டைக் குழல்’ துப்பாக்கி? கடுகடுப்பில் ஜெயக்குமார்! சண்டை செய்ய போகும் சிவிஎஸ்!
சென்னை: அதிமுகவில் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வட மாவட்டங்களில் வலுவான தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களுக்குப் பின்னணியில் சசிகலா இருக்கலாம் என்கின்றனர் சென்னை அதிமுகவினர்.
அதிமுகவில் நாளுக்கு நாள் மோதலும், பிளவும் அதிகரித்து வரும் நிலையில் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எவ்வளவோ பிரச்சனைகளைத் தாண்டி முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தாலும், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு நெருக்கடி வந்துகொண்டேதான் இருக்கிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா சிறை சென்ற நிலையில் ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓபிஎஸ் உடன் கூட்டு சேர்ந்தார்.

அதிமுக பிளவு
இதனால் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பினர். அப்போது இருந்து தற்போது வரை சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் சசிகலா. இது ஒரு புறம் இருக்க ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் நான்காண்டுகள் ஓபிஎஸ் ஆதரவு எடப்பாடிக்கு இருந்த நிலையில் தனது ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக்கொண்ட அவர் ஓபிஎஸ்ஸைக் கட்சியை விட்டு நீக்கினார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அப்போதே சில முன்னாள் அமைச்சர்கள் இருந்தபோதிலும் தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பக்கமே இருந்தனர்.
எடப்பாடி சிக்கல்
நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்து தேடி தரப்பில் தஞ்சம் புகுந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்த போதும் கட்சியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக்கொண்டார் எடப்பாடி. இந்த நிலையில் தான் அதிமுகவின் மிக முக்கிய சீனியர்களின் ஒருவரான செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராகத் திரும்பி இருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கோட்டையன்
செங்கோட்டையனின் பதவிகள் பறிக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கான ஆதரவு வட்டம் குறையவில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கானோர் செங்கோட்டையனை சந்தித்து பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியோ புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். ஈரோடு பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து ஒன்றியச் செயலாளர்களும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க கட்சிக்குள் எடப்பாடிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
6 அமைச்சர்கள்
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என ஆறு அமைச்சர்கள் குழு எடப்பாடியைச் சந்தித்தது. அதனை வெளிப்படையாகத் தெரிவித்தது செங்கோட்டையன். ஆனால், இது பச்சைப்பொய் என எடப்பாடி பழனிசாமி மறுத்தார். உண்மையில் எடப்பாடி பழனிசாமி அவரது வீட்டில் சந்தித்தது தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், அன்பழகன், செங்கோட்டையன் உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள் தான்.
சிவி சண்முகம்
கட்சியிலிருந்து முக்கிய தலைவர்களை வெளியேற்றிவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்தது. எனவே, சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் வரவேண்டும் என சிவி சண்முகம் வற்புறுத்தியதாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக ராயபுரத்தில் வலுவாக இருந்த தான் தோற்கக் காரணம் பாஜக கூட்டணி தான் என ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அதனை மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
அப்போது இருந்த இந்த ஆறு அமைச்சர்களும் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் வெளிவந்திருக்கிறார். விழுப்புரத்திலும் சென்னையிலும் செல்வாக்கோடு இருக்கும் சிவி சண்முகமும் ஜெயக்குமாரும் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் செங்கோட்டையனுடன் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுக மோதல்
ஆனால் அந்த தகவல்களை இருதரப்புமே உறுதிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு செங்கோட்டையன் பேசி வருவதாகவும் இதற்குப் பின்னணியில் சசிகலா, ஓபிஎஸ் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வரும் காலங்களில் எடப்பாடிக்கு எதிரான மாஜி அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து வெளிவருவார்கள் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications