பிரஷர் போடும் பாஜக.. கூடுகிறது அதிமுக மா.செ கூட்டம்.. எடப்பாடி முக்கிய ஆலோசனை!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 31 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்த இருகட்சிகளும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. ஆனால் இதுவரை பெரிய வேறு எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் சேராத சூழலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயலை பாஜக தலைமை நியமித்தது.

அதிமுக - பாஜக கூட்டணி
சென்னை வந்திருந்த பியூஸ் கோயலும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. கூட்டணியை பலப்படுத்துவது, கள நிலவரம் என்ன, தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படவில்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
பாமகவில் தந்தை மகன் மோதல் முடிவு பெறாமல் இருப்பதாலும், தேமுதிகவும் பொங்கலுக்கு பிறகே முடிவை அறிவிக்க இருப்பதாகவும் கூறிவிட்டதால் பாஜகவுக்கு இது சற்று அதிருப்தியை காட்டுவதாகவும், மறுபுறம் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிக்கும் நடவடிக்கைக்கும் பெரிய பலன் கிடைக்கவில்லை.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பொங்கலுக்கு பிறகே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூறி வரும் சூழலில் அவர்கள் விஜய் பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காகவும் பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதனால் விரைவில் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டு தொகுதி பங்கீடை செய்ய பாஜக விரும்புகிறது.
இத்தகையை பரபரப்பான சூழலில், வரும் 31 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்', எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 31.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications