2015ல் இதே அளவு மழைதான்! அப்போ சென்னை எவ்ளோ அல்லோலப்பட்டது.. அதிமுகவை அட்டாக் செய்த மா சுப்பிரமணியன்
சென்னை: மழை வெள்ளம் பாதிப்பு குறித்து பேசும் தகுதியே ஜெயக்குமாருக்கு கிடையாது. ஏனென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு இதே அளவு மழைதான் பெய்தது. அன்னைக்கு சென்னை எந்த அளவு அல்லோலப்பட்டது என்று நினைத்து பார்க்க வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால் டிசம்பர் 4, 5 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கே சென்னை வெள்ளத்தில் தத்தளித்தப்பதாக அதிமுக விமர்சித்து வருகிறது.

இது தொடர்பாக அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தமிழக அரசை விமர்சித்து இருந்தார். ஜெயக்குமார் கூறுகையில், "உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்றார்கள், நிறைவேற்றிவிட்டார்களா.. ஒன்னும் செய்யவில்லை.
எடப்பாடி விமர்சனம்: அதுபோலத்தான் மழை நீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறுவதும்... காதில் பூ சுற்றும் கதையாகத்தான் முதல்வரின் அந்த அறிக்கை உள்ளது. அந்த மாதிரி நிறைவேற்றியிருந்தால் வெள்ளம் வடிந்து இருக்கும். 4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறீர்கள். அதனால் என்ன தாக்கம்.. விளைவு என்ன? கொளத்தூர் தொகுதியிலேயே தண்ணீர் நிற்கிறது. அடுத்த மழைக்கு தண்ணீர் நிற்காகது என இப்போ சொல்வார்கள். இவர்கள் ஆட்சி இருக்கும் வரை மக்களுக்கு கஷ்டம் தான்" என்று சாடியிருந்தார்.
மா.சுப்பிரமணியன் பதில்: அதேபோல், அதிமுக பொதுச்செய்லாளர் எடப்பாடி பழனிசாமியும், நிர்வாகத்திறமை இல்லாத திமுக அரசால், ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. முறையாக மழை நீர் வடிகால் பணிகளை நடத்தியிருந்தால் சென்னைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்று சாடியிருந்தார். இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பு குறித்து அதிமுகவினருக்கு பேச தகுதி இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- மழை வெள்ளம் பாதிப்பு குறித்து பேசும் தகுதியே ஜெயக்குமாருக்கு கிடையாது. காட்டமாக சொல்கிறேன் என நினைக்க வேண்டாம்.. ஜெயக்குமாருக்கோ அதிமுகவினருக்கோ மழை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது. ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு இதே அளவுக்கான மழைதான் பெய்தது. 30 செண்டி மீட்டர் மழை.. ஒரே நாளில் ஒரு லட்சம் கன அடியை திறந்து விட்டார்கள்.
யோக்கியதை இல்லாதவர்கள்: அன்னைக்கு சென்னை எந்த அளவு பாதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேலானவர்கள் வெள்ளத்தில் அடித்து கொல்லப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கானவர்களின் சொத்துக்கள் காணாமலே போய்விட்டது. லட்சக்கணக்கான குடிசைகள் நீரில் மூழ்கி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஒட்டு மொத்த சென்னையே ஒரு வேளை உணவுக்கு ஹெலிகாப்டரில் அல்லது .. மேலே யாராவது உணவு போடுவார்களா என்று காத்திருந்த கேவலமான நிலை இருந்தது.
இந்த சூழலை ஏற்படுத்திய மிகச்சிறந்த புத்திசாலிகள், சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர்கள் அதிமுகவினர்.. எனவே அவர்கள் இந்த மழை சூழலை பற்றி பேசுவதற்கு கொஞ்சமும் யோக்கியதை இல்லாதவர்கள். இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார்.












Click it and Unblock the Notifications