மூடப்பட்ட அதிமுக கதவு.. திமுகதான் ஒரே வழி? விடாமல் மொய்க்கும் தேனி ர.ர.க்கள்! குழப்பத்தில் ஓபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரேயடியாக கட்சிக்குள் மீண்டும் இடம் அளிக்க மறுத்துள்ளதால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற விவாதம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில், திமுகவில் இணைவதே கடைசி அரசியல் முடிவு என்ற கருத்தே மேலோங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இணைய நான் தயாராக இருக்கிறேன்... பழனிசாமி தயாரா? என ஓபிஎஸ் வெளிப்படையாக கேள்வி எழுப்பியிருந்த போதிலும், இபிஎஸ் தரப்பில் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. இதற்குப் பின்னணியில், தென் மாவட்டங்களில் இருக்கும் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் கடும் எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக சந்தித்த பின்னடைவு, கட்சிக்குள் நடந்த அதிகாரப் போட்டி, மற்றும் ஓபிஎஸ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அலட்சியமான தேர்தல் பணிகள் ஆகியவை இன்னும் மறக்கப்படாத துரோகம் என அந்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம்
2026 தேர்தலில், இபிஎஸ் மீண்டும் முதல்வராக வரக்கூடாது என்ற நோக்கில் சில இடங்களில் உள்ளடி வேலைகள் நடந்ததாகவும், குறிப்பிட்ட வேட்பாளர்களை தோற்கடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால்தான் தேர்தல் முடிந்தவுடன் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் என்ற கோஷம் தென் மாவட்டங்களில் முதலில் எழுந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதிமுக கதவு மூடல்
இந்த சூழலில், இபிஎஸ்ஸே விரும்பினாலும், ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் அனுமதிக்க தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர் தயாராக இல்லை என்பதே நிலவரம். இந்த அரசியல் முடக்கத்திற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில் அடுத்த கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. மாவட்ட வாரியாக விசுவாசிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லும் யோசனைக்கு பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓ பன்னீர்செல்வம் திமுக இணைவு
தவெக-வில் சேர்ந்தாலோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலோ அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்கும் வேலையை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அதனால் ஓபிஎஸ்ஸுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நேரடி அரசியல் பலன் கிடைக்காது என்பதே அவர்களின் மதிப்பீடு. இதற்கு மாற்றாக, திமுகவில் இணைவதே தற்போது ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் நடைமுறை வாய்ப்பாக அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.
தேனி ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
திமுகவில் இணைந்தால், ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் சாத்தியம் இருப்பதுடன், அவரது ஆதரவாளர்களில் சிலருக்கு சட்டமன்ற உறுப்பினர்களாகும் வாய்ப்பும் உருவாகலாம் என்ற கணக்கே அந்த ஆலோசனைகளின் மையமாக இருக்கிறது. அதிமுக கதவு முழுமையாக மூடப்பட்டு, மாற்று அரசியல் வாய்ப்புகள் குறுகி வரும் நிலையில், ஓபிஎஸ் எடுக்கும் அடுத்த முடிவு அவரது அரசியல் வாழ்க்கையில் மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியலிலும் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
2026 சட்டமன்ற தேர்தல்
ஆனாலும் ஓ பன்னீர் செல்வத்துக்கு திமுக தரப்பில் இணைவதில் தயக்கம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. மூன்று முறை அதிமுகவில் முதலமைச்சராக இருந்து விட்டு திடீரென திமுகவில் ஒரு சாதாரண தொண்டனாக இணைவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. அது வருங்காலத்தில் தனக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார். அதனால் தான் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இறுதி முடிவு ஓபிஎஸ்ஸின் கையில்தான் இருக்கிறது... ஆனால் நேரம் வேகமாக கரைந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications