அவரை அடக்கி வாசிக்க சொல்லுங்க.. அமித் ஷாவிடம் எடப்பாடி சொன்ன புகார்? அண்ணாமலைக்கு பெரிய செக்?
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜகவில் ஒரு பிரிவினர் அதிமுக கூட்டணிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதுகிறார். இது குறித்து நேற்று டெல்லி பயணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பழனிசாமி, அண்ணாமலை மீது பல புகார்களை அடுக்கி, ஒரு முக்கிய ஆவணத்தையும் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்தாலும், முன்னாள் தலைவர் அண்ணாமலையின் செல்வாக்கு கட்சிக்குள் இன்னும் கணிசமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் அதிமுக கூட்டணிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை பாஜக
அண்ணாமலையின் செல்வாக்கு டெல்லி அளவில் வலுவாக இருப்பதால், தமிழக பாஜகவின் முக்கிய முடிவுகளில் அவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அண்ணாமலைக்கு திமுக வட்டாரத்திலும் நல்ல ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சித் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு வகித்தாலும், பல முக்கிய விவகாரங்களில் அண்ணாமலையின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை சாதகமாகப் பயன்படுத்தி, அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் அவ்வப்போது அதிமுகவிற்கு எதிராகச் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது பாஜக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தோல்வி
எடப்பாடி பழனிசாமி தோல்வியடைய வேண்டும் என்று பாஜகவில் ஒரு குழு செயல்படுவதாகக் கூறப்படுகிறது. "அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால், எடப்பாடியின் வளர்ச்சி தடுக்க முடியாததாகிவிடும், இது பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்" என்பதே அக்குழுவினரின் கருத்தாக உள்ளது. இதனால், பாஜகவின் உட்கட்சி பூசல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுவாக புதிய தலைவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட பல நிர்வாகிகளை மாற்றவும் அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் திமுகவை கடுமையாக விமர்சிப்பதில்லை என்றும், போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்றும் ஒரு குறைபாடு கட்சிக்குள் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளது.
சமீபத்தில் ஆ. ராசா, அமித் ஷாவை விமர்சித்தபோது நயினார் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. டெல்லி அழுத்தம் கொடுத்த பின்னரே அவர் போராட்டம் செய்தார். நயினாரின் இந்த அணுகுமுறையை அண்ணாமலை, அமித் ஷாவிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும், இதன் காரணமாக டெல்லி தரப்பும் நயினார் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை - டெல்லி பாஜக
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, நயினார் தலைவராக இருந்தாலும், "அவர் அணிந்திருக்கும் உடை அண்ணாமலையுடையது" என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலையின் செல்வாக்கு இன்னும் அதிகமாக இருப்பதாகவும், இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான், தமிழக பாஜகவில் சிலர் அதிமுகவிற்கு எதிராகக் காய்களை நகர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதனால்தான் அவர் டெல்லி பயணத்தில் அமித் ஷாவிடம் முக்கிய ஃபைல் ஒன்றை அளித்ததோடு, அண்ணாமலை பற்றிய புகார்களையும் அளித்துள்ளார்.
பாஜகவின் தற்போதைய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு வகித்தாலும், முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்னும் கட்சிக்குள் கணிசமான செல்வாக்குடன் இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் கூட்டணிக்கு எதிராகச் செயல்படுவதாகவும் பழனிசாமி புகார் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பாஜகவிலேயே சிலர் சதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலைக்கு திமுக வட்டாரத்திலும் நல்ல ஆதரவு உள்ளதாகவும், பல அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் எடுத்துரைத்துள்ளார். அண்ணாமலையை விசாரியுங்கள்.. அவரை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள்.. நிலைமையை சரி செய்யுங்கள்.. நீங்கள் இவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒரு ஃபைலுடன் அமித் ஷாவை சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications