மந்தமான அதிமுக விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவு.. என்ன நடக்குது?
சென்னை: அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில், எதிர்பார்த்த அளவிற்கு நிர்வாகிகள் இடையே உற்சாகம் இல்லாத மந்தமான சூழல் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக தரப்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போது விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், டிசம்பர் 23ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டிசம்பர் 15ஆம் தேதி மட்டும் அதிமுகவினர் பலரும் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
அன்று ஒருநாளில் மட்டும் 1,300 விருப்ப மனுக்களை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு தாக்கல் செய்தனர். ஆனால் 2வது நாளில் விருப்ப மனுக்கள் விநியோகம் வெறும் 64ஆக குறைந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமி காது வரை சென்றுள்ளது. இதனால் உடனடியாக அலர்ட்டான எடப்பாடி பழனிசாமி, கடந்த தேர்தலின் போது 8,241 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிமுகவின் அத்தனை அமைப்புகளும் உஷாராகின. அமாவாசை தினமான நேற்று அதிகளவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல் 234 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று அதிமுக ஐடி விங் மூலமாக விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக அதிகளவில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் மார்கழி மாதம் என்பதால் நல்ல நாள் பார்த்து பலரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூறியுள்ள டிசம்பர் 15 முதல் 23 வரை 3 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருப்பதால், அதிமுகவினர் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications