Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருந்ததியர் உள் ஒதுக்கீடு..அதிமுக தான் காரணம்! மைனாரிட்டி திமுக செய்த வேலை.. எடப்பாடி பழனிசாமி பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பட்டியலின மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும்' என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இதற்கு அதிமுக எடுத்த முயற்சிகள் தான் காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பை பெற்றுத் தந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இட ஒதுக்கீடு கொள்கையை தமிழகத்தில் 100 சதவீதம் அமல்படுத்தி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இன்றுவரை பயனடைந்து வருகின்றனர் என்றால், அதற்கு முக்கிய காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

Edappadi Palaniswami Reservation Supreme Court

கழகத்தின் இருபெரும் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பெயர்கள் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; 1991-96 ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தைப் பெற்றவர் எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களில், மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கின்ற அருந்ததியர்களின் வளர்ச்சிக்காக, கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் காவல் தெய்வங்கள் வழியில், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை, குறிப்பாக அருந்ததியரை கண் இமைபோல் பாதுகாத்து வந்தது.

தமிழக அரசு, 2009-ஆம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், அருந்ததியர் மக்களை வஞ்சிக்கின்ற வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையிலான வழக்குகள் 2010-ஆம் ஆண்டு மைனாரிட்டி திமுக ஆட்சியில் திட்டமிட்டு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த உள் இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

எனது தலைமையிலான அம்மாவின் அரசு, அருந்ததியர் மக்களுக்கான உள் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய ஆதிதிராவிடர் நலச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி அம்மாவின் அரசு சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு திறம்பட கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. அருண்மிஷ்ரா அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு சாதகமான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

பின்பு இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அம்மாவின் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இன்றைய தமிழக அரசும் வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில், 'அரசியல் சாசன 14-ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை; பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை; பட்டியல் இனத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை. எனவே, SC, ST பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என்ற தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு 1.8.2024 அன்று வழங்கியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் நீதியரசர் திரு. அருண்மிஷ்ரா அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்புதான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வழக்கில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டு, இந்தத் தீர்ப்பினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சட்ட வல்லுநர்கள், முழு ஆதரவு அளித்த தமிழ் நாடு அருந்ததியர் சமுதாய மகாசபை, அருந்ததியர் சமூக மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+