ஆண்கள் இலவச பயணத்தை கேட்டார்களா? எடப்பாடி கொடுத்த தேர்தல் வாக்குறுதி.. கொந்தளிக்கும் சீமான்!
சென்னை: ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று கூறிய சீமான், இலவச பேருந்து பயணத்தை ஆண்கள் கேட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் திமுக நடைமுறைப்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அதிமுக ஆட்சிக்கு வந்தபின் குலவிளக்கு திட்டமாக மாற்றப்பட்டு ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் திமுகவின் விடியல் பேருந்து பயணத் திட்டம் ஆண்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் இந்த இரு அறிவிப்புகள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை.
ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன், இன்னொரு ஆயிரம் சேர்த்து கொடுக்க போகிறார். இதனால் தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியில் இருந்து ரூ.15 லட்சம் கோடியாக மாறும். அதேபோல் நகர்ப்புற பேருந்துகளில் ஆண்கள் இலவச பயணத்தை கேட்டார்களா? ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வாருகிறது. இதனால் ஏற்படும் இழப்பை எங்கிருந்து எடுப்பார்கள்.
இலவச பேருந்து பயணம் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பேருந்தில் குடும்பத்துடன் செல்வாரா? அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதேபோல் வீடு கட்டிக் கொடுப்பதாக கூறி இருக்கிறார். இரு ஆட்சி காலத்திலும் கோழிக் கூடு போல் வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டில் யாராவது இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications