சூப்பர் ஹீரோ.. இனி திமுக கிட்ட மக்கள் ஏமாறவே மாட்டாங்க.. சென்னை ராயப்பேட்டையில் ஜெயக்குமார் ஒரே போடு
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்களை நடத்துவது வழக்கம்.. அதிலும், மாநிலங்களை பொறுத்து, பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்துவதும் வழக்கம்.

அந்தவகையில், வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையம்: அந்தவகையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை கடந்த 2 மாதங்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகிறது.
இதனால் அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் பணி, தொகுதி பங்ககீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்களை அமைத்துள்ளது..
கூட்டணி: இதில் அதிமுகவை பொறுத்தவரை இதுவரை யாருடனும் கூட்டணி முடிவாகவில்லை.. பாஜகவுடனான கூட்டணியை முறித்தும்கூட, பெரிய அளவிலான ஆதரவுகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.
எனினும், களப்பணியை தீவிரப்படுத்தி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன..
குழு அமைப்பு: அந்த வகையில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றிருந்தனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அதிமுக ஆலோசனை செய்தது.. நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த குழு இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
சூப்பர் ஹீரோ: அப்போது, "2021ம் ஆண்டு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் ஏமாந்து விட்டனர். இனி எதற்கும் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை மக்கள் நலன் சார்ந்த அறிக்கையாக இருக்கும்.
மாநில உரிமைகளை பேணிக்காக்கும் ஒரு அறிக்கையாக இருக்கும். தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும்... தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் தெரிய வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications