தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா?
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கடுமையான உட்கட்சிப் பிரச்சனையில் சிக்கியிருந்த அதிமுகவில், தற்போது மிகப்பெரிய அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிளவுபட்டிருந்த அதிமுக, இன்று மீண்டும் ஒன்றிணைய இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து சமரசம் ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இன்று இரு அணிகளும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் எதிராக அளித்திருந்த புகார்களையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
அதேநேரத்தில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் அதிருப்தி அதிகரித்தது. தொடர்ந்து தோல்வி, ஒருதலைப்பட்ச முடிவுகள், மாவட்டச் செயலாளர் பதவி நீக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.
எடப்பாடி பழனிசாமி
அதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அந்த அணியினரின் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனால் அதிமுகவில் மோதல் வெளிப்படையான அரசியல் போராட்டமாக மாறியது. அதேசமயம், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சி.வி.சண்முகம் - வேலுமணி அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சிவி சண்முகம்
இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பத் தொடங்கினர். ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரி பாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன் ஜெய்சங்கர், காங்கேயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கட்சி தாவல் தடைச் சட்டம் தங்கள் மீது பாயக்கூடும் என்ற அச்சமே இந்த திருப்பத்திற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.
வேலுமணி அணி
ஏனெனில், அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தேவைப்படுகிறது. 47 எம்எல்ஏக்கள் கொண்ட அதிமுகவில் குறைந்தது 32 பேர் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் - வேலுமணி அணிக்கு 25 பேரின் ஆதரவு மட்டுமே இருந்தது. இதனால் சட்ட ரீதியான சிக்கல்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
இந்தநிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது, அதிமுக அதிருப்தி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்தார். இதனால் அதிமுக பலம் மேலும் குறைந்தது. இந்த சூழலில்தான், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற அழுத்தம் இருதரப்பிலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக இணைப்பு
குறிப்பாக, தவெக தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் இருப்பது, இரு அணிகளையும் கவலையடையச் செய்துள்ளது. மேலும் தாமதித்தால் கட்சியே பலவீனமடையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதனால், நேற்று இரவு நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி பிளவுபட்டபோது யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அந்த பொறுப்புகளை மீண்டும் வழங்குவது, வழிகாட்டுக் குழு அமைப்பது, முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுப்பது போன்ற விஷயங்களில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே அணியாக செயல்படுமா?
இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக உட்கட்சி மோதலுக்கு தற்காலிக முடிவு கிடைக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த இணைப்பு எவ்வளவு நாள் நீடிக்கும்? மீண்டும் அதிமுக ஒரே அணியாக செயல்படுமா? அல்லது இது அரசியல் அவசியத்திற்கான தற்காலிக சமரசமா? என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications