தனித்து போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்க Mr.நயினார் நாகேந்திரன்- அதிமுக Vsபாஜக குடுமிபிடி சண்டை!
சென்னை: சட்டசபையில் ஆண்மையுடன் பேச அதிமுகவினரை பார்க்க முடியவில்லை என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் நயினார் நாகேந்திரனுக்கும் பாஜகவினருக்கும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து சவால்விட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சென்னையில் பாஜகவினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பேசிய பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் ஆண்மையுடன் பேசிய கூடிய அதிமுகவினரை பார்க்க முடியவில்லை என்றார்.

கொந்தளிப்பில் அதிமுக
ஏற்கனவே துக்ளக் குருமூர்த்தி, அதிமுக தலைவர்களை ஆண்மை இல்லாதவர்கள் என கூறிய போது அதிமுக மைல்டாக எதிர்வினை காட்டி இருந்தது. இம்முறை நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினரை சமூக வலைதளங்களில் அதிமுகவினர் வெளு வெளுவென வெளுத்து வருகின்றனர்.

தனித்து போட்டியிட தயாரா?
இது தொடர்பாக அதிமுக ஐடிவிங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பது போல், அதிமுகவின் தயவால் சட்டமன்றத்தில் நுழைந்து, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுகவுக்கு அரசியல் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் @NainarBJP! என கூறியுள்ளார். இதையே அதிமுகவின் @AIADMKITWINGOFL என்ற ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர்.

ஆண்மை சொல் அல்ல- செயல்
அதிமுக ஐடிவிங் மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் @NainarBJP , நீங்கள் வேண்டுமானால் @AIADMKOfficial தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ....??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல் என காட்டமாக கூறியுள்ளார்.

கடுமையான விமர்சனம்
@samueljoel280 என்ற திருவள்ளூர் மாவட்ட அதிமுக ஐடிவிங் இணை செயலாளர், தன் சொந்த கட்சி தலைவருக்கு சால்வை அணிவிக்க முடியாதவர் ஆண்மை பற்றி பேசலாமா 9R நாகேந்திரன் ? என கேள்வி கேட்டு ஒருவீடியோவும் பதிவிட்டுள்ளார். @Sakthivel__Admk என்ற அதிமுக தொண்டர், கூட்டணி இல்லை என்ற அறிக்கையை எதிர்நோக்கி நாங்கள் @OfficeOfOPS @EPSTamilNadu வரலாற்று சிறப்பு மிக்க இந்த அறிவிப்பை வெளியிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் அதிமுக நிர்வாகிகள் பலரும் மிக மிக கடுமையான வசை சொற்களால் நயினார் நாகேந்திரனையும் பாஜகவையும் விமர்சித்து வருகின்றனர்.
Recommended Video

நயினார் நாகேந்திரன் விளக்கம்
இதனைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!! என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications