அதிமுக வேட்பாளராக்குவதாக கூறி ரூ5 கோடி மோசடி- சசிகலா அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜன் மீது வழக்கு
சென்னை: சேலம் தொகுதி அதிமுக வேட்பாளராக்குவதாக கூறி ரூ5 கோடி மோசடி செய்ததாக சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4-வது குற்றவாளி இளவரசி. சசிகலாவுடன் சேர்ந்து பெங்களூருவில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தவர் இளவரசி.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஆந்திராவில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அங்கு பணிபுரிந்த ஜெயராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இளவரசியும் போயஸ் கார்டனும்
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் குடும்பத்துடன் குடியேறியவர்தான் இளவரசி. அவருக்கு கிருஷ்ணப்பிரியா, ஷகீலா என இரு மகள்களும் விவேக் என்ற மகனும் உள்ளனர். ஜெயலலிதா மறைந்த போது அவரைப் போல உடை உடுத்தி சிகை அலங்காரம் செய்து அரசியலுக்கு வரப்பார்த்தவர் கிருஷ்ணப் பிரியா, ஜெயா டிவி, மிடாஸ் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் விவேக்.

இளவரசி மருமகன் ராஜராஜன்
ஷகீலாவின் கணவர் ராஜராஜன். 2001-ம் ஆண்டு இருவருக்கும் சமயபுரம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் சிங்கப்பூரில் தொழில்களை நடத்திய நிலையில் தமிழகம் திரும்பினார். ஶ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது இவரது கட்டுப்பாட்டில்தான் தேர்தல் பணிகள் நடைபெற்றன. அதனால் அதிமுகவினருக்கு நன்கு அறிமுகமானார் ராஜராஜன். கோடநாடு பங்களா தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வருமான வரித்துறையால் 2 முறை விசாரிக்கப்பட்டவர் ராஜராஜன்.

ராஜராஜன் மீது ரூ5 கோடி மோசடி
இந்த ராஜராஜன் மீதுதான் தற்போது சேலம் அதிமுக நிர்வாகி கருணாகரன் என்பவர் சென்னை எழும்பூர் 14-வது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாயை பெற்று கொண்டு சீட் வாங்கி தராமலும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ராஜராஜன் ஏமாற்றினார் என்பது வழக்கு.

சென்னை எழும்பூர் கோர்ட்டில் வழக்கு
ஏற்கனவே சென்னை மத்திய குற்றபிரிவில் ராஜராஜன் மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் ராஜராஜன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாகரன் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெ.பரத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை அக்டோபர் மாதம் 5-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவதாக நீதிபதி பரத் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications