அதிமுக பொதுக்குழு செல்லாது.. ஜூன் 23க்கு முன்பிருந்த நிலைதான் நீடிக்கும்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அதிமுகவில் ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது; ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு என்ன நிலைப்பாடு இருந்ததோ அதே நிலை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் அணி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சியின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார்.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே இரு வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டது.

எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ் , வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதையே தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார்.

நீதிபதி ஜெயசந்திரன்
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎல், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தீர்ப்பின் விவரம்
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது. கட்சி விதிப்படி, பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும். அவைத் தலைவர் அழைப்பு விடுக்க முடியாது. அவர் பொதுக் குழு கூட்டத்தை தான் நடத்த முடியும். அதன்படி, ஜூன் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னதாக, கட்சியில் என்ன நிலை இருந்ததோ, அதேநிலைதான் நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து இருப்பதால், அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பதே ஆகும்.












Click it and Unblock the Notifications