"வன்முறை" .. இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி குட்டு வைத்தது முதல்.. புது பதவிக்கு வேட்டு வரை.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு வாதங்கள் முதல் தீர்ப்பு வரை நடந்தது என்ன?

Recommended Video

    ADMK Crisis | ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிதான் உயர்ந்தது - OPS தரப்பு வழக்கறிஞர்கள்

    சென்னையில், கடந்த ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பிவைத்ததுடன், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

    இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு விசாரணைக்கு பட்டியலிட்ட போது, பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

    AIADMK general council: What happened in court and how judgement favoured for OPS

    அதைத் தொடர்ந்து, வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன், இவ்வழக்கை தொடர்ந்து 2 நாளாக விசாரித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதால், அதை நோட்டீசாக கருத வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

    ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ்,
    ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டன. பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது என விளக்கம் அளித்து வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது, ஒரு ஆண்டுக்கு முன்பே எப்படி பதவிகள் காலாவதி ஆனது என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, 2021 டிசம்பர் 1 செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே முடிவாகும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

    தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன என்றும், இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் மட்டுமே விதிகள் திருத்தப்பட்டதாகவும், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும், ஜுன் 23 பொதுக்குழுவிலேயே, ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டதால், முன்கூட்டி நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூற முடியாது. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோட்டீசின் பொருள் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் 2432 பேர் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின், கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறி விஜய் நாராயண் தன் வாதங்களை நிறைவு செய்தார்.

    அதன்பின்னர் இபிஎஸ். தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, எதிர் மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுவிட்டு, மனுதாரராக பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே பன்னீர்செல்வத்துக்கு தெரிந்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு வழங்க வேண்டும். ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியமில்லை. கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும்.

    மேலும், அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் நடத்தையை கவனிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார். அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் குறுக்கிட்டு, வழக்குக்கு சம்பந்தமில்லாத அந்த விவகாரம் குறித்து வாதிட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

    அதைத் தொடர்ந்து வாதிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களின் தேர்தல் செல்லும் என்றும், அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள் என்பதால், அவர்கள் எடுக்கும் முடிவு என்பது ஒட்டுமொத்த உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    பின்னர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை பெரும்பான்மையையே பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை. பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை.

    எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 2017ல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யத்தான். ஆனால் இப்போது இருக்கும் சூழலே வேறு. பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா? என கேள்வி எழுப்பியபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கட்சி நலனுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் மனுதாரராக இருந்தாலும், ஒருங்கிணைப்பார் பதவியின் அடிப்படையில் எதிர் மனுதாரர்களில் ஒருவராக குறிப்பிட வேண்டும் எனவும் குரு கிருஷ்ணகுமார் குறிப்பிட்டு வாதிட்டார்.

    பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவரென அறிவிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

    அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மற்றொரு மனுதாரர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஊடகங்கள் பிளாஷ் செய்வதை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படிதான் ஜூன் 23 பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது என தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது. கட்சி விதிப்படி, பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும். அவைத் தலைவர் அழைப்பு விடுக்க முடியாது. அவர் பொதுக் குழு கூட்டத்தை தான் நடத்த முடியும்.

    அதன்படி, ஜூன் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னதாக, கட்சியில் என்ன நிலை இருந்ததோ, அதேநிலைதான் நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து இருப்பதால், அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பதே ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+