பெண் டிஎஸ்பி மீதே தாக்குதல்..திமுக ஆட்சியில் யாருக்கும் பயமில்லை! சந்தி சிரிக்குது..எடப்பாடி அட்டாக்
சென்னை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை, போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்கிய காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திடீரென அங்கிருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து அந்த நபரை அப்புறப்படுத்த முயன்ற போது திடீரென அவர் பெண் டிஎஸ்பிஐ தாக்கினார். தொடர்ந்து டிஎஸ்பி உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை சூழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென போலீசாரையும் பெண் டிஎஸ்பியையும் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர்.
சிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் சூழ்ந்து கொண்ட காவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து அவர்களை தாக்க தொடங்கினர். பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் நான்கு பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், ஒருவரை கைது செய்தனர்.இதற்கிடையே திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications