தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் அதிமுக தலைமையிலான பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர் அமைப்பினர், சங்கத்தினர் திமுகவின் பக்கம் இருக்கும் நிலையில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கத்தின் இந்த முடிவின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தை எடுத்து கொண்டால் திமுக கூட்டணிக்கு தான் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகம் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு எப்போதும் குறைவாக தான் கிடைக்கும். இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக வேறு உள்ளது. இதனால் நிச்சயம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் தங்களுக்கு தான் கிடைக்கும் என்று திமுக கூட்டணி கட்சிகள் நினைத்தனர்.
ஆனால் விஜயின் அரசியல் வருகை கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை தவெகவின் பக்கம் செல்வதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். இது போதாது என்று தற்போது அதிமுக - பாஜக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்க நிர்வாகிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

எடப்பாடியுடன் சந்திப்பு
இதுதொடர்பாக தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்க நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கடிதம் வழங்கி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் உள்ள சூபி சன்னி முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒரு முக்கியமான விஷயத்தை தங்களது கனிவான கவனத்திற்கு மரியாதையுடன் கொண்டு வர விரும்புகிறோம்.
தலைமை காஜி விவகாரம்
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு அரசின் தலைமை காஜி (Chief Quazi) பதவிக்கு சூபி சன்னி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரே நியமிக்கப்படுவது என்ற நடைமுறை இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 3% முஸ்லிம் மக்கள்தொகையில் சுமார் 2.3% பேர் சூபி சன்னி முஸ்லிம்களாக உள்ளனர்.
ஆனால் சமீபத்தில், மாநில அரசு சூபி சன்னி முஸ்லிம் சமூகத்தின் கருத்து அல்லது பரிந்துரையை பெறாமல், தேவ்பந்தி பிரிவைச் சேர்ந்த (சூபி அல்லாத சன்னி முஸ்லிம்கள்) ஒருவரை தலைமை காஜியாக நியமித்துள்ளது. இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள 2.3% சூபி சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளையும் மன உணர்வுகளையும் மிகவும் புண்படுத்தியுள்ளது.
2,500+ பள்ளி வாசல் – தர்காக்கள்
தமிழ்நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட சன்னி பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளிவாசலும் தர்காவும் மாநில வக்ஃப் வாரியத்திற்கு சுமார் 7% தொகையை வழங்கி வருகின்றன. இவ்வளவு முக்கியமான பங்களிப்பு இருந்தும், கடந்த நான்கு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களாக தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு நிரந்தர முதன்மை செயல் அதிகாரி (Chief Executive Officer) நியமிக்கப்படவில்லை.
Tamil Nadu Elections 2026 | The South India Dargah Mosque Association, led by senior member MGFA Jafar Ali, along with eight other Muslim organisations, including the Tamil Nadu Urdu Muslim Development Organisation and other Sufi Sunni groups, met AIADMK General Secretary… pic.twitter.com/bLW1ZrLIZH
— ANI (@ANI) April 10, 2026
சரியான நிர்வாகம் இல்லாத காரணத்தால், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களின் பிரதிநிதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வக்ஃப் சொத்துகள் தொடர்பான பல பிரச்சனைகள் மற்றும் தகராறுகள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும், வக்ஃப் சொத்துகள் தொடர்பான பல வழக்குகள் மற்றும் அபராத விவகாரங்களும் இன்னும் நிலுவையில் உள்ளன.
என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு
இதன் காரணமாக, வக்ஃப் சொத்துகளின் நிர்வாகிகளான அறங்காவலர்கள் மற்றும் முதவல்லிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு நீதியை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தையும், அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எங்கள் சமூகத்தின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன், சூபி சன்னி முஸ்லிம் சமூகமானது அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சூபி சன்னி முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், பாரம்பரியம் மற்றும் நலன்களை பாதுகாக்க தாங்கள் தங்களது கனிவான தலையீட்டை வழங்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி ஹேப்பி
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்க நிர்வாகிகளின் இந்த மூவ் அதிமுக கூட்டணியை ஹேப்பியாக்கி உள்ளது. அதேவேளையில் திமுகவுக்கு இது அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications