அதிமுக ஆபீசில் அடிதடி.. சுதாரித்த பெஞ்சமின்.. பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கொடுங்க.. கோர்ட்டில் மனு
சென்னை: வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனிடையே அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளனர்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் இந்த கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம். ஏற்கனவே பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கடந்த ஜூன் 7ம் தேதி டி.ஜி.பி. மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது முடிவு எதும் எடுக்காததால், மீண்டும் கடந்த ஜூன் 15ம் தேதி மனு அளிக்கப்பட்டது. அப்போதும் காவல்துறையினர் அந்த மனு மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமார் ஆதரவாளர் தாக்கி மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் இரு தினங்கள் முன்பு அரங்கேறியது. தொடர்ந்து தலைமை அலுவலகத்தில், பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications