4ஆவது இடத்தில் அதிமுக! 2026 தரப்போகும் அதிர்ச்சி? கட்சியைக் காப்பாற்றுவாரா எடப்பாடி?
சென்னை: அதிமுக மீண்டும் பழையபடி ஒருங்கிணையவில்லை என்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி 4ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்ற ஒரு அதிர்ச்சிகரமான தகவலை மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நடந்த கூட்டத்தில் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சிலகாவைச் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அதிமுகவுக்குள் 6 மூத்த தலைவர்கள் கட்சி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக முதன்முதலாக இந்தத் தகவலைப் பொதுவெளியில் போட்டு உடைத்தவர் பத்திரிகையாளர் லக்ஷ்மணன் தான். அவருக்கு இந்தத் தகவல் கிடைத்து எப்படி? 6 அதிமுக தலைவர்கள் எடப்பாடியைச் சந்தித்துப் பேசிய பிறகும் அவர் இறங்கி வரவில்லை. அதன் அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதைப்பற்றி பத்திரிகையாளர் எஸ் பி லக்ஷ்மணன், "எனக்கு இந்தத் தகவல் முதன்முதலாகக் கிடைத்தபோது அதை மீண்டும் உறுதி செய்து கொண்டபிறகுதான் செய்தியை வெளியிட்டேன். மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 'இந்தத் தோல்வி வர உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பாடங்களையும் படிப்பினைகளையும் கொடுத்துள்ளது' என்று கூறியிருந்தார். அதன் பின்னர் சிலநாட்கள் முன்னதாக சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி, 'ஓபிஎஸ் ஒரு துரோகி' என்று மறுபடியும் ஒரு முத்திரை குத்தினார். 'சசிகலா, ஜானகியைப் போல ஒரு அறிக்கையை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்' என்றும் சொல்லி இருந்தார்.
இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகு எடப்பாடி தன்னை மறுபரிசீலனை செய்து கொள்வார் என நினைத்த தலைவர்களுக்கு இந்தப் பேச்சு பெரிய கோபத்தை உண்டாக்கியது. அவர் மறுபடியும் அதே நிலைப்பாட்டில் தொடர்வது வருத்தத்தை அளித்தது. ஆகவேதான் 6 அதிமுக தலைவர்கள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை வீட்டில் போய் சந்தித்து சில விளக்கங்களை முன்வைத்தனர். கடந்த சில தேர்தல்களாக தோல்வியைச் சந்தித்து வருகிறோம். ஆகவே மறுபரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால், இறுதிவரை எடப்பாடி யாரையும் சேர்ப்பதாக இல்லை என்ற முடியில் உறுதியாக இருந்துள்ளார். அதைத்தான் நான் முதன்முதலாக வெளியிட்டேன். எடப்பாடி கருத்தைக் கேட்டபிறகு 6 தலைவர்களும் தங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர்களும் ஓபிஎஸ், சசிகலாவைக் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தோடு திரும்பி இருக்கிறார்கள். இதுதான் இப்போது வரை உள்ள நிலைமை.
அதிமுக தலைமை என்பது யார் என்பதற்காக மோதல் இல்லை இது. கடந்த சில தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஆக, அங்கே கட்சிக்குள் ஒரு ஒற்றுமை தேவைப்படுகிறது. அதை முன்வைத்தே அந்த 6 தலைவர்களும் எடப்பாடியைச் சந்தித்து விவாதித்து இருக்கிறார்கள். ஒருவேளை சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகிய மூவரும் அதிமுகவில் இணைக்கப்பட்டால் என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பதை நாம் சொல்ல முடியாது. நாம் விவாதிக்கவும் முடியாது. அது அந்தக் கட்சியின் பிரச்சினை. தொண்டர்களின் பிரச்சினை.
ஆகவே, இப்போதைக்கு அதிமுகவுக்குள் ஒரு ஒற்றுமை தேவைப்படுகிறது. அது இருந்தால்தான் வெற்றி சாத்தியம். அதை முன்வைத்தே 6 தலைவர்களும் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிமுக தலைவர்கள் உட்கார்ந்து விவாதித்தால் ஒரு தீர்வை எட்ட முடியும். இது ஒன்று தீர்க்கப்படாத பிரச்சினை இல்லை. வரும் 2026இல் அதிமுக தோல்வியை மீண்டும் சந்தித்தால், அந்தக் கட்சியை பிறகு காப்பாற்றுவது கஷ்டம். ஆகவே, அதை ஒருங்கிணைப்பது பற்றி தலைவர்கள் கவலை கொள்கிறார்கள். அதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும். அவர் இந்த விவகாரத்தில் முரண்டு பிடித்தால், உடனே போட்டியாக ஒரு பொதுக்குழுவைக் கூட்டி அவரை கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் என நான் சொல்லவரவில்லை. எடப்பாடி இந்தத் தருணத்தைப் புரிந்து கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டிய தருணம் என்றே சொல்ல வருகிறேன்.

அதிமுக தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து நிற்பதால்தான், அதிமுக வரலாற்றில் இல்லாத வகையில் ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. சட்டமன்றத் தொகுதி ரீதியாகப் பிரித்துக் கணக்கிட்டால், வரும் தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் 4 ஆம் இடத்திற்குப் போகக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்துதான் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிலர் அதிமுகவுக்குள் ஒரு குரலை எழுப்பி வருகிறார்கள். இது அதிமுக வளர்ச்சிக்கு நல்லதுதான். இல்லை என்றால், வரும் தேர்தலில் மிகப்பெரிய இழப்பு அதிமுகவுக்குத்தான் ஏற்படும்.
இன்றைக்கு அதிமுகவின் முகமாக எடப்பாடிதான் உள்ளார். அவர்தான் இதற்கான ஒரு முன்னெடுப்பை எடுக்க வேண்டும். அவர் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவரை, இணைப்பு சாத்தியமில்லை. அதை உணர்ந்துதான் அந்த 6 அதிமுக தலைவர்கள் முதலில் எடப்பாடியைச் சந்தித்துப் பேசி உள்ளனர். அதில் முன்னேற்றம் ஏற்படாததால் மேலும் தங்களின் முயற்சியைத் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளனர்" என்கிறார்.












Click it and Unblock the Notifications