தமிழகத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்! மருத்துவமனையில் நிரம்பி வழியும் மக்கள்! அறிக்கை கேட்கும் அதிமுக
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா தொற்று விவரங்கள் தினந்தோறும் எப்படி அறிக்கையாக வெளியிடப்பட்டதோ, அதேபோல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு விவரங்களை தினம் தோறும் திமுக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும் என அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தட்ப வெப்பநிலை காரணமாக வைரஸ், பாக்டீரியா கிருமிதொற்றுகள் அதிகமாக பரவும். அந்த வகையில் இப்பொழுது தமிழகத்தில் புளூ வைரஸ், டெங்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் அவர்கள், 3.57 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தி 7,133 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் அதில் 533 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்ததாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் 10,576 முகாம்கள் வாரம் தோறும் நடத்தப்பட்டு 5.21 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குதிரைக்கு எப்படி கடிவாளமோ, அதுபோல சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளும் கட்சிக்கு, எதிர்க்கட்சி அரசின் குறைகளை சுட்டிக்காட்டி வழி நடத்துவதும் மரபுதான். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் கொரோனா காலகட்டத்தில் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி அனுபவம் பெற்ற எடப்பாடியார் அவர்கள் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதித்து வருவதாக அறிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் மட்டும் நேற்று முன்தினம் 13 பேர் டெங்கு காய்ச்சலாலும், 67 பேர் புளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கடந்த 30 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதுபோல் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆளும் திமுக அரசு தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரோ அதை திசை திருப்பும் வண்ணம் 8 கோடி மக்கள் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 12,525 கிராம ஊராட்சிகள் வசிக்கக்கூடிய நிலையில் வாரம் ஒரு முறை என்று 10,576 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 7,133 பேருக்கு மட்டுமே பாதிப்பு என்ற வகையில் பதில் அளித்துள்ளார்.
மக்கள் நலனின் அக்கறை கொண்டு தினந்தோறும் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்திட வேண்டும். அப்போதுதான் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். புளூ, டெங்கு காய்ச்சலானது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தாக்கும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 70 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள் அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே மருத்துவ முகாம்கள் நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு எப்படி அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று விவரங்களை தினந்தோறும் பட்டியல் வெளியிடப்பட்டதோ அதேபோல திமுக அரசு புளூ, டெங்கு பாதிப்பு விவரங்களை வெளியிட முன்வரவும். அப்போது தான் நோய் பாதிப்பின் உண்மை தன்மை வெளிவரும்.''












Click it and Unblock the Notifications