கனமழை பாதிப்பு.. மக்களை நேரில் சந்தித்து உதவிகள் வழங்கும் இபிஎஸ்.. வாய்ப்பை தவறவிடும் ஓபிஎஸ்!
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி வழங்க உள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியே இருக்கின்றன. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை பெற்றது வரை எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்து காரியம் சாதித்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி தொண்டர்கள் மத்தியிலும் யார் உண்மையான தலைமை என்பதை காட்டினார். அதோடு ஓபிஎஸ் கோட்டை என்று கூறப்படும் தேனி மாவட்டத்திலேயே ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படி தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதில் இருந்து, தமிழக அரசுக்கு எதிராக களமாடுவது வரை எடப்பாடி பழனிசாமி வேகவேகமாக காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால் மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வமோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மன்னிப்பு கேட்டதிலும், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதிலுமே காலம் கடந்துவிட்டது.
தமிழக அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டாலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களை திரட்டுவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக பாஜக நிர்வாகிகளை சந்திக்கவும், சென்னை வந்த பிரதமர் மோடியையும் சந்தித்தார். அதன்பின்னர் ஓபிஎஸ் தரப்பு அமைதியாகியதாகவே தெரிகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.
இதனால் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். இப்படி கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்து வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஒவ்வொரு வாய்ப்பையும் வீணடித்து வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு அறிக்கை வெளியிடும் ஓபிஎஸ், இதுவரை மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வாய்திறக்கவே இல்லை. தென் மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியில் நீரை சேமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் ஓபிஎஸ் செயல்பாடுகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் புலம்பலை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications