பசும்பொன்னில் நாடகம்! ஒன்று சேர்ந்த பூஜ்ஜியங்கள்.. ராஜ்ஜியம் அமைக்காது! விளாசிய ஆர்பி உதயகுமார்
மதுரை: பசும்பொன்னில் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றி ஒரு கருப்பு வரலாற்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள், நாடகத்திற்கு திரைக்கதை எழுதிய செங்கோட்டையன் இன்று ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் எனவும், எத்தனை பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்தாலும் ஜெயலலிதாவின் ராஜ்ஜியம் அமைவதை தடுக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை, கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது அதிமுக அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், பசும்பொன்னில் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றி ஒரு கருப்பு வரலாற்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள் எனவும், அவர்களால் ஜெயலலிதாவின் ராஜ்ஜியம் அமைவதை தடுக்க முடியாது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

அதிமுக உட்கட்சி மோதல்
இதுதொடர்பாக மதுரையில் பேசிய அவர்," குடும்ப ஆட்சி வாரிசு, அரசியல் மன்னர் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற மாபெரும் ஜனநாயக இயக்கத்தை தொண்டர்கள் இயக்கத்தை தொடங்கி எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். அவர் மறைவிற்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தன்னுடைய உழைப்பால் இந்தியாவில் மூன்றாவது மாபெரும் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை கொண்டு சென்றார்.
ஆர்பி உதயகுமார்
இந்த 52 ஆண்டுகால வெற்றி பயணத்திலே அறிமுகம்,அதிகாரம், செல்வாக்கு, வாழ்வு, வசதி பெற்றவர்கள் பல லட்சம் பேர் இதை எதையும் எதிர்பார்க்காமல் கோடிக்கணக்கான தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. நான் இப்போது யாரையும் குறைத்து மதிப்பீட்டு இதை சொல்லவில்லை. யாரையும் நான் அவதூறாக சொல்லவில்லை.யாருடைய உழைப்பையும் நான் குறைத்தோ, செல்வாக்கை குறைத்தோ நான் சொல்லவில்லை.
ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு
அதிமுகவின் விசுவாசமுள்ள தொண்டர்கள் உழைப்பால் மூன்று முறை முதல்வராக இருந்த அதிமுகவின் விசுவாச தலைவர் என்று கூறி வருபவர் சமீபத்திலே சிவகங்கை சீமைலே திமுக மீண்டும் 2026 இல் ஆட்சிக்கு வரும் என்று வாய்ப்பு கூசாமல் கூறுகிறார். அப்போதே கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயம் உடைந்து இரத்தம் வடிகிறது. அவருக்கு தெரியுமா தெரியாதா? தனக்கு பதவி இல்லை என்று சொன்னால் கோயிலாக வழங்குகிற தலைமைக் கழகத்தையே சுக்கு நூறாக அடித்து உடைத்து சிதைத்தார். அப்போதே தொண்டர்கள் இதயம் சிதைந்தது அவருக்கு தெரியுமா? தெரியாதா?
டிடிவி தினகரன்
திமுக தலைவர் ஸ்டாலினை நடை பயிற்சியிலே எதார்த்தமாக சந்தித்து பின் வீட்டிற்க்கே நேரடியாக விருந்தாளியாக சென்று திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பா பாடுகிறார். அதனால் தொண்டர்களுடைய நம்பிக்கை சிதைந்து போனது இதயங்கள் உடைந்து போனதே அதிமுக தொண்டர்களுடைய வேதனையை புரிந்து கொண்டாரா புரிந்து கொள்ளவில்லையா? தமிழ்நாடு அரசியலிலே இது போன்ற பல நாடகங்களை இந்த தமிழ்நாடு கண்டிருக்கிறது.
செங்கோட்டையன்
அரசியலிலே கோலோச்சுபவர்கள் தங்கள் பாதை மாறுகிற போது தங்கள் பாதை விலகுகிற போது லட்சிய பாதையில் இருந்து விலகி அரசியலில் பூஜ்ஜியங்கள் ஆகியுள்ளார்கள். ஆகவே அரசியலிலே பூஜ்ஜியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக வரலாறு கிடையாது. ஆகவே திமுகவின் அஜந்தாவிற்கு ஸ்டாலின் தேர்தல் வியூகத்தின் அஜெண்டாவிற்கு ஆதரவு தெரிவித்து திமுகவின் பீ.டீம் இன்றைக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு தொண்டர்களால் பசுந்தோல் போர்த்திய புலியாக தான் பார்க்கப்படுகிறது. எத்தனை எத்தனை துரோக நாடகத்தை நீங்கள் அரங்கேற்றினாலும் ஒருபோதும் தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications