ஜஸ்ட் சலசலப்பு....கொடி விவகாரத்தில் சசிகலா மீது இன்னமும் அதிமுக வழக்கு தொடரவில்லையே?
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் சசிகலா மீது அதிமுக இன்னமும் எந்த ஒரு வழக்கும் போடாமல் அமைதியாக இருப்பது பல யூகங்களை கொடுத்து கொண்டிருக்கிறது.
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் பயணம் செய்தது பெரும் சர்ச்சையானது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த உரிமை இல்லை.. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதுவரையில் சசிகலா மீது எந்த ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பல யூகங்களை உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ் மகன்
அதிமுகவில் சசிகலாவை இம்முறை கடுமையாக எதிர்ப்பது முதல்வர் எடப்பாடி தரப்பு. ஓபிஎஸ் தரப்பு இம்முறை சசிகலாவுடன் சமாதானமாகும் நிலையில்தான் இருக்கிறது. சசிகலா நலம்பெற வேண்டும் என வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மீது அதிமுக தலைமை இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை.

சசிகலா நீக்கப்பட்டாரா?
பாஜகவின் துணையுடன் சசிகலா விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்பது முதல்வர் ஈபிஎஸ் தரப்பு நிலைப்பாடு. ஆனால் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிவிட்டோம் என்கிற தகவலை இதுவரையிலான எந்த ஒரு வழக்கிலும் யாருமே சொல்லவில்லை என்கிறது அவரது தரப்பு.

சசிகலா தொடர்ந்த வழக்குகள்
மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு இன்னமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதேபோல் அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் மதுசூதனன் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலும் சசிகலா மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யப் போகிறாராம். அதனால் அதிமுக மீதான சசிகலாவின் பிடி போய்விடவில்லை என்கிறது அவரது தரப்பு.

புதிய வழக்கும் தயக்கமும்
சசிகலா தரப்பின் இந்த நிலைப்பாடுகளை மனதில் வைத்து கொண்டுதான், எதற்கு புதியதாக ஒரு வழக்கு போட வேண்டும்? அப்படி ஒரு வழக்குப் போட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உயிர் கொடுத்துவிடக் கூடாது என்பதும் அதிமுக தரப்பின் கருத்தாக உள்ளதாம். சசிகலாவின் வருகையை முன்னிட்டு அதிமுகவில் எழுந்துள்ள சர்ச்சை இப்போதைக்கு ஓய்ந்துவிடக் கூடியதும் அல்ல என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications