அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் எடப்பாடி அறிவித்திருக்கிறார்.. கிண்டல் செய்த திருமாவளவன்!
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கிண்டல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய திருமாவளவன், திமுக அளிக்கும் உரிமைத் தொகை அதிகாரமில்லாத நிலையில் பெண்களை வலிமைப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அதிமுகவின் 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் குடும் சுமை அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் சுமையை போக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 12ஆம் வகுப்பு வரை படித்து, வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1,000 வழங்கப்படும். மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நகரப்பகுதிகளில் நடைபாதை, சிறுவியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை அறிவிப்பு மக்களிடையே விவாதமாகி இருக்கிறது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இது வழக்கமான தேர்தல் காலத்து வாக்குறுதிகள். அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நம்புகிறேன்.
இருந்தாலும் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுகவுக்கு போட்டியாக அதிமுக அறிவிக்கிறது என்ற புரிதல் மக்களுக்கு இருக்கும். அதேபோல் தொடக்க காலத்தில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தவிர வேறு எதையும் இலவசமாக வழங்க கூடாது என்று கூறி இருக்கிறோம். திமுக உரிமைத் தொகையாக பெண்கள் மேம்பாட்டிற்கும், மாணவர்கள் மேம்பாட்டிற்காகவும் வழங்குகிறது.
மகளிர் உரிமைத் தொகை அதிகாரம் இல்லாமல் இருக்கும் நிலையில் உள்ள பெண்களை வலிமைப்படுத்தும். அதனால் விசிக வரவேற்கிறது. இதனால் ஏற்படும் நிதிச்சுமை என்பது சமாளிக்க கூடியதாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் திமுக மேற்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications