டீல் ஓகே.. 35 எம்.எல்.ஏ சீட் + 1 ராஜ்யசபா சீட்! எடப்பாடியுடன் டீலிங்கை முடித்த அன்புமணி! பரபர பாமக!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார். பாமகவுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் சில நாட்கள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 35 எம்எல்ஏ சீட்டுடன், ஒரு ராஜ்யசபா சீட்டு தருவதாக அதிமுக தரப்பில் உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகளும் தீவிரமாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. திமுகவைப் பொருத்தவரை கூட்டணி ஏற்கனவே உறுதியானதுதான். சில சலசலப்புகள் இருந்தாலும் பெரிய அளவிலான பிரச்சனை எதுவும் இல்லை.
அதே நேரத்தில் தற்போது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக 2026 நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே உள்ளிட்ட சில கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருக்கின்றன.

2026 தேர்தல்
அதே நேரத்தில் தேமுதிக, பாமகவை கூட்டணிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம். 2001 தேர்தலில் இருந்து அதிமுக, திமுக கூட்டணிகளில் பாமக கணிசமான தொகுதிகளைப் பெற்று வந்திருக்கிறது. கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 20 இடங்களில் வென்றது. 2006 திமுக கூட்டணியில் 30 தொகுதிகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. 2016 தேர்தலில் தனித்து நின்ற பாமக தமிழ்நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பாமக கூட்டணி
2021 தேர்தலில் வடமாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்குக் கணிசமான வெற்றியும் வாக்குகளும் கிடைக்க பாமக கூட்டணி முக்கியம் என்பதால் தான் அந்தக் கட்சியின் கோரிக்கையான 10.5% இட ஒதுக்கீட்டைக் கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்த நிலையில், தந்தை மகன் இடையில் மோதல் வெடித்தது. இதனால் கடந்த சில தினங்களாக கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தடைபட்டிருந்தது. இந்த நிலையில் பாமக அதிமுக இடையேயான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாமக ஒப்பந்தம்
பாமகவில் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் இடையே உட்கட்சிப் பூசல் காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தாமதம் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸைப் பாமகவின் தலைவராக அங்கீகரித்ததோடு, மாம்பழம் சின்னத்தையும் ஒதுக்கீடு செய்தது. இதனால் ராமதாஸ் பாமகவுக்கும் மாம்பழம் சின்னத்திற்கும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து ராமதாஸைத் தவிர்த்துவிட்டு, அன்புமணியுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இருக்கும் கூட்டணி வாய்ப்பையும் அன்புமணி எடுத்துரைத்து, பேரத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணி
இதை அடுத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பாமகவுக்கு 35 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த தேர்தலில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகளைப் பெற்றுள்ளதால் பாமக ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் தங்களுக்கான வாய்ப்பை உறுதி செய்யத் தலைமையை தொடர்புகொண்டு வருகின்றனர். விரைவில் அதிமுக பாமக தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications