கச்சிதமாக வேலையை முடித்த சிவி சண்முகம்! பாமகவில் பஞ்சாயத்து ஓவர்? விரைவில் சேரும் அய்யா சின்னய்யா?
சென்னை: கடந்த வாரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசிய சிவி சண்முகம் அதிமுக கூட்டணிக்கு அவரை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசி இருக்கிறார் சி.வி சண்முகம். பாட்டாளி மக்கள் கட்சியின் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் நிலையில் விரைவில் தந்தை மகன் இடையே என மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணையும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி இடையிலான நீண்டகால மோதல் முடிவுக்கு வரப்போகிறது என்ற அரசியல் பரபரப்பு தற்போது எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தந்தை, மகன் இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது இதற்கான தெளிவான சான்றாக பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசினார் சண்முகம். அதன்பின் நேற்று மீண்டும் அவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாமக உட்கட்சி பிரச்சனை
பாமக உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடந்த இந்த சந்திப்புகள், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாமக கூட்டணி உருவாகும் சாத்தியத்தை வலுப்படுத்தியுள்ளது. பாமக மோதல் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் தீவிரமானது. வன்னியர் சங்க மாநாட்டை முன்னிட்டு, ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவரிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆனால் கட்சியின் 95 சதவீத நிர்வாகிகள் அன்புமணியை ஆதரித்து அவருடன் சேர்ந்தனர். இதையடுத்து அன்புமணி பொதுக்குழு கூட்டங்கள், மாநிலமெங்கும் சுற்றுப்பயணங்கள் நடத்தி கட்சியின் எதிர்காலத்தைக் கட்டமைக்கத் தொடங்கினார்.
அதிமுக பாமக கூட்டணி
அவர் பேச்சுகள் பெரும்பாலும் திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையிலேயே அமைந்தன. இதனால், அவர் அதிமுக கூட்டணியுடன் இணைய வாய்ப்புள்ளது என்ற ஊகங்கள் வலுப்பெற்றன. இடையில் அன்புமணி அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 35 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டு வழங்கப்படும் என பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த பாமகவை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் அதிமுகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிவி சண்முகம் பேச்சுவார்த்தை
இதற்காக தைலாபுரத்தில் நடந்த சந்திப்பில் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும், அந்த சந்திப்பு விரைவில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. 2021 தேர்தலிலும் அதிமுக-பாமக கூட்டணியை உறுதி செய்ய முக்கிய பங்கு வகித்தவர் சி.வி. சண்முகம்தான். இப்போது மீண்டும் அதே பணியை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமக அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றே அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
தந்தை மகன் சமாதானம்
மேலும் தந்தை மகனும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி அதிமுகவை ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத நிலையில், ராமதாஸ் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார். அதே நேரத்தில் ராமதாஸும் சிவி சண்முகத்தின் தந்தையும் முன்னாள் எம்பியுமான வேணுகோபாலும் நல்ல நண்பர்கள். ராமதாசை அப்பா என்றுதான் சிவி சண்முகம் அழைப்பார். மகன் போலவே சண்முகத்தை ராமதாஸ் கருதுகிறார். அதனால் தான் ராமதாசை சமாதானப்படுத்தி பாமகவை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி சிவி சண்முகத்திடம் ஒப்படைத்து இருக்கிறார். குடும்ப நிகழ்வை மையமாக வைத்து மாறி மாறி இருதரப்பையும் சண்முகம் சந்தித்து வரும் நிலையில் அதிமுக பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications