எலக்சனுக்கு ரெடியாகும் எடப்பாடி.. அண்டர்டேபிள் டீலிங்? அதிமுக மா.செ.க்களை கண்காணிக்க உத்தரவு
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறது அதிமுக. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மூத்த நிர்வாகிகளும் தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி, அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிமுக மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பிப்பது, கூட்டணி கட்சிகளை அழைப்பது, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவைத் தவிர மற்ற அனைவரையும் கட்சிக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி,
இதில் பல முக்கிய அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது சம்பந்தமான கருத்துகளை வழங்குவது குறித்தும், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள், கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்வது குறித்தும், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு விரைந்து ஆற்றுவது குறித்தும், அதிமுக கள ஆய்வுக் குழுவினருக்கு விரிவாக ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறிப்பாக, கட்சியின் கிளை முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது, நிர்வாகிகளின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து வெளிப்படத் தன்மை வாய்ந்த அறிக்கையை கட்சிக்கு உண்மையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். மேலும் மாவட்டங்கள் மற்றும் தொகுதி வாரியாக ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? வெற்றி தோல்விக்கான காரணங்கள், என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என்பதை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டும் எனவும், பிற கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளுடன் தொடர்பில் இருக்கும் மாவட்ட செயலாளர் யார் என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் எந்தெந்த தொகுதிகள் பலவீனமாக உள்ளது, அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தீர்வுகள் என்னென்ன, என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், உட்கட்சி பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பாகவும் தனக்கு தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும் தனியாக பட்டியல் தயாரிக்கும் படி மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications