அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா..ஹைகோர்டில் பரபர வாதங்கள்..தீர்ப்பு எப்போது?
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாத விவாதங்கள் நடைபெற்றன.
சென்னை: அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையேயான சட்ட போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. பொதுச்செயலாளர் தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. , பன்னீர்செல்வம் தரப்பில் மார்ச் 24ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

விதிகளில் திருத்தம் செய்யும் அதிகாரம்
கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026வரை உள்ளது.

அவசர வழக்காக விசாரணை
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஹைகோர்ட்டில் விசாரணை
தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுச்செயலாளர் தேர்வுக்கான தேர்தலை நடத்துங்கள், ஆனால் முடிவை தீர்ப்பு வரும் வரை அறிவிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கு மார்ச் 22ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

பரபர வாதங்கள்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில், 1972ம் ஆண்டு துவங்கப்பட்ட அதிமுகவில் 1977 முதல் உறுப்பினராக பன்னீர் செல்வம் உறுப்பினராக உள்ளார். 2017 பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட பன்னீர்செல்வம் 2026 டிசம்பர் வரை பதவியில் தொடர உரிமை உள்ளது. 2022ல் நடந்த பொதுக்குழு அடிப்படை உறுப்பினர்கள் தலைமை பொறுப்புக்கு வருவதை தடுக்கும் வகையில் முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. வங்கி கணக்குகள், உறுப்பினர்கள் நியமனம், புதிய திட்டங்கள், தேர்தலில் வேட்பாளர்களை போட்டியிட அனுமதிப்பது என அனைத்திலும் முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்க செயற்குழு அனுமதி அளித்துள்ளது.

யாருக்கு அதிகாரம்
பொதுக்குழுவுக்கு அதிகாரமா? தலைமை கழகத்துக்கு அதிகாரமா? யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது என கட்சி விளக்கவில்லை. திமுகவுடன் இணைந்தும், திமுகவின் செயலை பாராட்டும் விதமாக செயல்பட்டதாலும், தனது சொந்த லாபத்திற்காக பல கோடிகள் செலவு செய்து செயல்படுவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, கட்சியின் நன்மைக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது சட்டவிரோதம்.

வாய்ப்பு தரவில்லை
கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. திட்டமிட்டு ஒருவரின் நலனுக்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கட்சி விதி 5ன்படி, உறுப்பினர்களை நீக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன், கட்சியின் 2 பங்கு உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். சுய விளக்கம் கேட்க வேண்டும். முதலில் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீக்கம் செய்யலாம். அனைத்தும் பொதுக்குழுவில் மீறப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் 2026ல் முடியும் வரை இந்த அதிகாரம் தொடரும். இடையில் பதவியை கலைக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் முடிந்த பின் புதிய பதவிகள் ஏற்படுத்துவதை எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதற்காக முதலில் பன்னீர் செல்வம் நீக்கம், பின்னர், விதிகளில் புதிய திருத்தம் செய்து எடப்பாடிக்கு எதிரானவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என பொதுக்குழுவில் அறிவித்துவிட்டு இதுவரை நடத்தவில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லலை என தெரிவிக்கப்பட்டது.

அதிமுக தரப்பு வாதம்
இதையடுத்து அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பன்னீர்செல்வம் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளலாம். பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது அவரின் சகோதரர் ராஜாவை எந்த விளக்கமும் அளிக்காமல் எந்த அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கனார் என காரணம் கூறவில்லை.

பொதுக்குழு முடிவு
எந்த வகையில் எல்லாமல் வழக்கு தொடர முடியாதோ? அந்த வகையில் பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். பொதுக்குழுவின் முடிவு இறுதியானது. அதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது. பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பொதுக்குழு முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தலையிட முடியாது
பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கான முகாந்திரமும், போதுமான காரணங்களும் இருந்ததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டார். கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

விதிகள் மாறலாம்
அதிமுக அரசு நிறுவனம் கிடையாது, விதிகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வபோது விதிகள் மாற்றி அமைக்க கட்சிக்கு உரிமை உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்ட பின், காலியிடம் ஏற்படாமல் இருக்கவும், கட்சியை வழிநடத்தவும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது.

முடிவு எடுக்கும் அதிகாரம்
1972ல் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுகவில் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு
2017ல் விதிகள் மாற்றப்பட்டது. அதன்படி, 2017ல் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கப்பட்டு பொதுக்குழு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. 2022ல் மீண்டும் முதன்மை உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டது.

எழுத்துப்பூர்வமான வாதங்கள்
இரண்டு தலைமைகளால், உடனடியான சரியான முடிவுகள் எடுக்க முடியவில்லை. அதனால் கட்சியை சரியாக வழிநடத்தவே ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டது என வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நீதிபதி பன்னீர்செல்வம் தரப்பில் மார்ச் 24ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா?
பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லுபடியாகும். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்ததும் ஏற்கப்படும். இந்த பதவி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 6 மாதங்களில் காலாவதியாகி விட்டாலும் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகள் தயாராக இருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆறுதலாக அமையலாம். ஆனால் அடுத்தகட்டமாக பொதுக்குழுவை கூட்டி முடிவுகளை எடுக்க வேண்டும். என்ன செய்யப்போகிறார் ஓ.பன்னீர் செல்வம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications