பாஜக மீதான பாசம்.. அதிமுக 2ம் கட்ட தலைகள் செய்த சம்பவம்.. விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மதுரையில் பாஜக சார்பாக நடைபெற்ற முருகன் மாநாடு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டமாக மாறும் என்று பாஜக கணித்த நிலையில், அது அதிமுகவுக்கு மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி இருக்கிறது. முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் குறித்து மோசமாக விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
அந்த வீடியோ ஒளிபரப்பான போது அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ராஜ் சத்யன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று, அவருக்கு வேல் மற்றும் முருகன் சிலையை பரிசாக அளித்துள்ளார்.

முருகன் மாநாடு சர்ச்சை
இதனால் முருகன் மாநாடு பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அதிமுக தலைவர்கள் விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திராவிடம், பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கூட்டத்தில் அதிமுகவினர் பங்கேற்றது அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள்
அதேபோல் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் வாழ்த்துகளை கூறி நிறுத்தி கொண்டார். ஆனால் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் அதிமுக தலைவர்களால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்ததால், கூட்டணி முறிவு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார்.
எஸ்பி வேலுமணி சம்பவம்
இதன்பின் பாஜகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர். எஸ்பி வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இன்னொரு பக்கம் டெல்லிக்கு சென்று எஸ்பி வேலுமணி அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்தார்.
செங்கோட்டையன் விவகாரம்
மறுபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். கொங்கு மண்டல அமைச்சர்கள் பலரும் பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வந்தனர். இதனால் அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் நெருக்கம் காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகியதாக பார்க்கப்பட்டது.
பாஜகவின் நோக்கம்
இந்த நிலையில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து, அதிமுகவின் தலைவர்களை விமர்சித்தே பாஜக செயல்படுவது அக்கட்சியினர் மத்தியில் விவாதமாகி வருகிறது. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை ஓபிஎஸ் மூலமாக அறுவடை செய்து வரும் பாஜக, இனி நேரடியாக அதிமுக வாக்குகளை வேட்டையாட துணிந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
தொண்டர்கள் பிரச்சனை
அதுமட்டுமல்லாமல் 2ஆம் கட்ட தலைவர்களின் ஆலோசனை காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணியை அமைத்தாலும், கீழ் மட்டத்தில் தொண்டர்கள் இன்னும் இணையவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக போட்டியிடும் இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்களா என்பதும், அதிமுக போட்டியிடும் இடங்களில் பாஜக தொண்டர்களும் ஆதரவளிப்பார்களா என்ற கேள்வி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி முடிவு
இதனால் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி அடுத்தக் கட்ட ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின் இதுவரை எந்தவொரு கூட்டமும் இணைந்து நடத்தப்படவில்லை. ஒரு போராட்டம் கூட நடக்கவில்லை. கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்தே அதிமுக சிக்கலை சந்தித்து வருவதால், எடப்பாடி பழனிசாமி விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications