அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்.. அப்பல்லோவில் மீண்டும் பரபரப்பு
சென்னை: மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த மாதம் முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் தற்போது அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன.
80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்துள்ளார்.

மதுசூதனன் உடல்நிலை
இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் கவலைக்கிடம்
தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல அவர் மீண்டார். இருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், இன்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த மதுசூதனன்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன். 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.

எடப்பாடி பழனிசாமி vs சசிகலா
முன்னதாக கடந்த மாதம் இவரது உடல்நிலை கவலைக்கிடமான போது, அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்களும் மதுசூதனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த போது, அதே நேரத்தில் அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலாவும் அங்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications