"வெல்லும் தமிழ் பெண்களா?” வேதனையில் தமிழ்ப் பெண்கள்.. ஸ்டாலினுக்கு எதிராக அட்டாக் மோடில் அதிமுக!
சென்னை: 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்வை திமுக அரசு நடத்தி வரும் நிலையில்,'வேதனையில் தமிழ்ப் பெண்கள்' என அதிமுக விமர்சித்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து தான், பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கொடுக்கப்படுகிறது, மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல என அதிமுக விமர்சித்துள்ளது.
சென்னையில் தமிழக அரசு சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையேற்று நடத்தி வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்வை 'வேதனையில் தமிழ்ப் பெண்கள்' என அதிமுக விமர்சித்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அன்றே வென்றாள் தமிழ்ப்பெண் ! இன்றும் தொடர்கிறது அந்த வெற்றி சரித்திரம்!
அஇஅதிமுக ஆட்சி என்பது வெறும் நிர்வாகம் அல்ல, அது பெண்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஒரு சகாப்தம். ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையால், தமிழ்நாட்டின் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற அனைத்து நிலைகளிலும் முன்னிலை பெற்றனர்.
பெண்களின் வெற்றிக்கான அடித்தளம் அன்றே வலுவாக அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா வழிவந்த, எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது, மேலும் தாலிக்குத் தங்கம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வு வளம் பெற்றது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.
இவ்வாறு பெண்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் தமிழ்ப் பெண்களின் வெற்றியைக் கொண்டாடிய இயக்கம் அதிமுக. இந்த வெற்றிப் பயணம் 2026 - ல் மீண்டும் தொடரும்!
விடியா திமுக ஆட்சியில் ஒரு கை 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து,
மறு கை அதற்கு பதிலாக 2000 ரூபாயாக பறிக்கும். அதுவும், வாக்குறுதி கொடுத்தது போல் அனைவருக்கும் எல்லாம் அல்ல. தமிழகப் பெண்களுக்கே தகுதி பார்த்து தான் கொடுப்போம் என இழிவுபடுத்தியது விடியா அரசு.
ஒருபுறம் இப்படி கொடுப்பது போல கொடுத்து, மறுபுறம் மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, அன்றாட மளிகை பொருட்கள் விலை உயர்வு என இருமடங்காக பெண்களிடம் இருந்து பறித்து விடுகிறது. இதுவா பெண்களுக்கான வெற்றி?
விடியா திமுக அரசுக்கு வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்த எந்தவித அருகதையும் இல்லை. வேதனையில் தமிழ்ப்பெண்கள் என்ற தலைப்பு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று மேடையில் முழங்க விடியா திமுக அரசுக்கு கூச்சமாக இல்லையா? தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்போது, இந்த விளம்பரக் கொண்டாட்டத்தால் யாருக்கு என்ன பயன்?
வெற்று விளம்பரத்தால் மட்டும் மட்டும் பெண்களின் வெற்றி வந்துவிடுமா? பெண்கள் பொதுஇடங்களில் கூட அச்ச உணர்வுடன் பயணிக்கும் நிலை தான் உங்கள் அகராதியில் வெற்றியா? விளம்பர மாடல் விடியா அரசே!வெற்று விளம்பரங்களில் காட்டும் கவனம், சிறிதளவாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இருக்கட்டும்.
வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களை குறிப்பாக பெண்களை குறிவைத்து தொடர்ந்து நடந்து வரும் கொலை கொள்ளை சம்பவங்கள். எங்கே போனது தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பு?
முதியோர்கள் பாதுகாப்பிற்கான திட்டம் என்று அதனை தொடங்கி வைப்பதோடு சரி, அதற்கு பிறகு அந்த திட்டம் என்ன ஆனது என்பது குறித்த கவலை பொம்மை முதல்வருக்கு இல்லை. இதுவா வெல்லும் பெண்களுக்கான திட்டம்? இவர்களும் தமிழகத்தில் தானே இருக்கிறார்கள்?
எப்போது என்ன நடக்கும் என்று அச்சத்துடனே வாழ்வது தான் வெற்றியா? இதையும் வெற்றி என விளம்பரம் செய்ய ஸ்டாலின் மாடல் அரசால் மட்டுமே முடியும்." என விமர்சித்துள்ளனர்.
மேலும், "குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே! எப்போது கொடுத்தீர்கள்.? எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.
இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்து விட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்து விட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள்.
இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை? தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான், மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை." என விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications