பிறந்த நாளில் எடப்பாடிக்கு இறங்கிய இடி! சத்தமின்றி லீமா ரோஸ் செய்த சம்பவம்? அதிமுக MLAகள் போர்க்கொடி
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்த நாள். ஆனால், பிறந்தநாள் அன்று அவருக்கு எதிர்பாராத ஷாக்கிங் பரிசு கிடைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் கட்டிக்காத்த அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைந்துள்ளது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கலகத்தில் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸுக்கு முக்கிய பங்கு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதிமுக இப்போது 10 ஆண்டுகளில் மூன்றாவது பிளவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் ஓபிஎஸ் கலகம் செய்த நிலையில், பிறகு எடப்பாடி கலகம் செய்தார். அதன் பிறகு எல்லாம் ஓரளவுக்குச் சுமுகமாகப் போன நிலையில், இப்போது எடப்பாடிக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் திரும்பியுள்ளனர். அதுவும் எடப்பாடி பிறந்த நாளான இன்று அதிகாரப்பூர்வமாக இந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிளவு
எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் தவெகவுக்கு எதிராக உள்ளனர். நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர். அதேநேரம் சிவி சண்முகம்- எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். இந்தப் பிளவுக்குப் பின்னால் பலர் இருந்தாலும்.. இதில் லீமா ரோஸ் பங்கு முக்கியம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
லீமா ரோஸ்
லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவிதான் இந்த லீமா ரோஸ். கோவை பின்னணியைக் கொண்ட இவர், நீண்டகாலமாகப் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பே அதிமுகவில் இணைந்தார். அதற்கு முன்பு வரை ஐஜேகே கட்சியில் இருந்த லீமா ரோஸ் தேர்தலுக்குச் சில காலம் முன்பு தான் அதிமுகவில் ஐக்கியமானார்.
அவருக்கு திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கொடுத்தார் எடப்பாடி. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்முறை எம்எல்ஏவாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே மிக அதிகச் சொத்து மதிப்பு கொண்டவர் இவர்தான் (சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல்). முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை (லீமா ரோஸின் மருமகன்) விடவும் இவரது சொத்து மதிப்பு தான் அதிகமாகும்!
சீக்கிரம் நடந்திருக்காது
இப்போது எடப்பாடிக்கு எதிராக 30+ அதிமுக எம்எல்ஏக்கள் கலம் செய்துள்ள நிலையில், அதில் லீமா ரோஸின் பங்கு மிக முக்கியமானது என்கிறார்கள். அதிமுக அதிருப்தி கோஷ்டிக்கும் (வேலுமணி - சண்முகம் அணி), விஜய்யின் தவெகவிற்கும் இடையே ஒரு தகவல் தொடர்பு பாலமாக லீமா ரோஸ் செயல்பட்டுள்ளார். தனது மருமகன் ஆதவ் அர்ஜுனா மூலம் விஜய் தரப்பிற்குத் தங்கள் நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். "லீமா இல்லையென்றால் இதெல்லாம் இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்காது" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
அந்த ஒரு பேட்டி
மே 5-ம் தேதி இரவு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் லீமா ரோஸ் ஒரு அதிரடி பேட்டியைக் கொடுத்தார். "அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; இபிஎஸ் அரசை வழிநடத்துவார் என நம்புகிறேன்" என அவர் கூறியபோது யாருமே அவரை நம்பவில்லை. ஆனால், அது உண்மையில் அதிமுகவிற்குள் நிகழப்போகும் பெரும் பிளவிற்கான முதல் எச்சரிக்கை மணி என்பதை இன்று தமிழகம் உணர்கிறது.
இதற்குப் பின்னால் ஒரு வலுவான 'கார்ப்பரேட் லாபி' இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லிக்கு நெருக்கமான சில சக்திகளின் ஆலோசனையின் பேரில், எம்எல்ஏக்களைத் தக்கவைக்கவும், அவர்களைத் தவெக பக்கம் இழுக்கவும் தேவையான உதவிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அன்று அதிமுக அலுவலகத்திற்குச் சென்ற போதும் கூட விஜய்யை சந்தித்தபோது லீமா ரோஸ், விஜய் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டார். இந்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications