அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு.. எடப்பாடி மனுவின் விசாரணையை தள்ளிவைத்த ஹைகோர்ட்
சென்னை: அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது.

இதையடுத்து பொதுக்குழு மூலம் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு பின்னடைவு தான் ஏற்பட்டது. குறிப்பாக அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.
இந்நிலையில் தான் அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், வழக்கு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யபடவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஓ பன்னீர் செல்வம் தரப்பில், கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
****












Click it and Unblock the Notifications