லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. அடுத்த மூவ் என்ன? அவசர அவசரமாக கூடும் அதிமுக.. இன்று முக்கிய மீட்டிங்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுகவின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. மொத்தம் 60 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டின் முடிவில் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி மீது நடத்தப்பட்ட இந்த ரெய்டு அதிமுகவினர் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் வலுவான தலைவராகவும் பார்க்கப்படும் வேலுமணியே ரெய்டில் சிக்கி இருப்பது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் இன்று இது தொடர்பாக அதிமுகவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ரெய்டு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று காலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 9 மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தல் திட்டங்கள் குறித்தும், களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்பாக லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து அதிமுகவின் கூட்டம் நடக்க உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் அவசர ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

கூட்டம்
இன்று பிற்பகலில் இந்த கூட்டம் நடக்கும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களுக்கு எதிராக நடத்தப்படும் ரெய்டுகள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்கனவே முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.

சோதனை
அதை தொடர்ந்து நேற்று எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த ஆலோசனை கூட்டத்தில் ரெய்டுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தொடர் ரெய்டுகளுக்கு அதிமுக தரப்பில் எப்படி எதிர்வினையாற்றுவது, இது தொடர்பாக சட்ட ரீதியான போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது, ஆளும் கட்சிக்கு எதிராக எப்படி காய் நகர்த்துவது என்று அதிமுக சார்பில் இன்று ஆலோசனை செய்யப்பட உள்ளது.

மேலும் ரெய்டு
நேற்று எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு கண்டிப்பாக கடைசி கிடையாது. வரும் நாட்களில் மற்ற மாஜி அமைச்சர்களும், அதிமுக தலைவர்களும் குறி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் பல ரெய்டுகள் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக அடுத்தக்கட்ட ரெய்டு நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அதிமுக கூட்டத்தில் இன்று ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சந்திப்பு
நேற்று ரெய்டுக்கு பின்பாக எடப்பாடி பழனிசாமியை எஸ்பி வேலுமணி அவரின் கிரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து பேசினார். ரெய்டு முடிந்தவுடன் நேரடியாக எஸ்.பி வேலுமணி எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இருந்தனர். திடீர் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.
Recommended Video

மீண்டும் ஆலோசனை
அதன்பின் ஓ. பன்னீர்செல்வத்தையும் எஸ்.பி வேலுமணி சந்தித்தார். இந்த சந்திப்பில் இதற்கு முன்பு ரெய்டில் சிக்கிய எம். ஆர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். அதேபோல் சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இருந்தனர். இரண்டு சந்திப்புகள் நேற்று அடுத்தடுத்து நடந்த நிலையில் இன்று அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
