நீட்: இபிஎஸ் கோரிக்கை-நிராகரித்த தமிழக அரசு- வழக்கு 12 வாரத்துக்கு ஒத்திவைப்பு- அதிமுக புது வியூகம்?
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. நீட் வழக்கில் தமிழக அரசு வாய்தா கேட்டு இழுத்தடிக்கக் கூடாது என்ற அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய பாஜக அரசு. இந்த நீட் தேர்வுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்னர், அதிமுக அரசு தொடர்ந்த ரிட் மனுவில் சில திருத்தங்களை மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தது. இதனையடுத்து தமிழக அரசின் நீட் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த ரிட் மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

இபிஎஸ் அறிக்கை
இதனிடையே அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழக அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தரவரிசைப் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் எனவும் அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது திமுக. இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்க்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளை போடுவதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது நீட் வழக்குக்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, தமிழக அரசின் நீட் விலக்கு கோரும் மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆகையால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றது தமிழக அரசு. இதனை ஏற்று 3 மாதங்களுக்கு ஒத்திவைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

அதிமுக போராட்ட வியூகம்
நீட் தேர்வு வழக்கில் கோரிக்கை வைத்தும் அதை ஏற்காமல் தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருப்பது அதிமுக தரப்பை கொதிக்க்வைத்துள்ளதாம். நீட் விவகாரத்தை இனியும் கையில் எடுக்காமல் இருந்தால் சரி வராது என்பதால் அதிமுக பிரமாண்டமான போராட்டம் ஒன்றை நடத்துவது தொடர்பாக பரபர ஆலோசனைகளில் இறங்கிவிட்டதாம். அப்படி நீட் தேர்வுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் ஆளும் திமுக அரசு மீதான அதிருப்தியை மடைமாற்ற முடியும் என்பதும் அதிமுகவின் வியூகம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications