அல்வா மாதிரி.. திமுகவிற்கு அள்ளிக்கொடுத்த எடப்பாடி.. அஸ்திவாரம் போடும் முன்பே.. கப்பல் மூழ்கிடுச்சே!
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்கள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019, 2015 லோக்சபா தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாத காரணத்தால் கடுமையான சரிவை எடப்பாடி சந்தித்தார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மண்டல அரசியலில் தற்போது நடந்துள்ளது.

1. எடப்பாடி - டிடிவி தினகரன் உரசல் - பாஜக கூட்டணியில் இருந்த அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் சமீபத்தில் எடப்பாடியை தாக்கி பேசினார். இப்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டிடிவி தினகரனுக்கு தென் மண்டலத்திலும், டெல்டாவில் கடுமையான முக்குலத்தோர் ஆதரவு உள்ள நிலையில் எடப்பாடி அவருடன் தொடர்ந்து மோதி வருவது தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்கும்.
2. டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், இனியும் காத்திருப்பது சரி அல்ல. சிலரின் துரோகத்தால் தான் கட்சி ஆரம்பித்தோம். துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் திருந்தவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது. இனியும் காத்திருப்பது சரி அல்ல, எங்களின் வழியில் செல்கிறோம். ஆணவம், அகங்காரம் பிடித்து சவுண்ட் பார்ட்டி போல் செயல்படுகிறார் (இபிஎஸ்) . டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என எண்ணினோம், அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். அமித் ஷாவின் பிளான் தோல்வி அடைந்துவிட்டது. என்டிஏ கூட்டணி தொடர்பாக அமித் ஷா போட்டிருந்த பிளான் தோல்வியில் முடிந்துவிட்டது, என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.
3. அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
4. ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
5. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவரின் வெளியேற்றமும் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய சவுக்கடியாக இருக்கும்.
6. இப்படி கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த தொடர் சம்பவங்கள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications