அதிமுக vs பாஜக: அண்ணா ரத்தத்தில் அபிஷேகம்- மிரட்டிய முத்துராமலிங்க தேவர்- இதுதான் அண்ணாமலை பேச்சு!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து தெரிவித்த கருத்தால் அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ என ஒரு பட்டாளமே கொந்தளித்து களமாடுகிறது. இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்களை கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல் பந்தாடுகிறார் அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜக, அண்ணா திமுக கூட்டணியில்தான் இருக்கிறது. தேசிய அளவில்தான் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகதான் 2-வது பெரிய கட்சி.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாஜக, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் தன்னிச்சையாக தொகுதிகளை கணக்குப் போட்டு களப்பணி செய்கிறது. இதனை பகிரங்கமாக அதிமுகவினரால் எதிர்க்க முடியவில்லை.
அண்ணாமலை சென்னை பேச்சு: இந்நிலையில் சென்னையில் சனாதன ஒழிப்பு விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து பேசிய பேச்சை முன்வைத்து இப்போது 'விளையாட்டை' அதிமுக தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
மதுரை நிகழ்வு: பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது (முழுமையாக): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு தமிழ் மாநாடு நடக்கிறது. ஜூன் மாசத்தில் 10 நாட்கள் நடக்குது. முதல் நாள் ராஜாஜி பேசினார். 2-வது நாள் இன்னொருத்தர் பேசுறார். 3-வது நாள் இன்னொருத்தர் பேசுறார். 4-வது நாள் பிடி ராஜன் பேசுகிறார்.
அழையா விருந்தாளி அண்ணா: ஆனால் அந்த மாநாட்டு அழைப்பிதழில் சம்பந்தமே இல்லாத, பெயரே இல்லாத அண்ணாதுரையையும் கூட கூட்டிகிட்டுப் போறார். மேடைக்குப் போய் அண்ணாதுரைக்கு மைக் கிடைக்கிறது. பேசுவதற்கு முன்னர் மணிமேகலை என்ற குழந்தை மிக அற்புதமாக தமிழ் சங்க இலக்கியப் பாடலைப் பாடுகிறார்.
பகுத்தறிவு பேச்சு: உடனே மைக் எடுத்த அண்ணாதுரை என்ன சொல்றாரு? ஓ.. இந்த பொண்ணு மணிமேகலை நல்லா பாடுச்சு.. இதே கற்காலமாக இருந்தால் என்ன சொல்லி இருப்பாங்கன்னா... உமையவள் பாலைக் குடித்துதான் இந்த மணிமேகலை பாட்டு பாடினாள் என கட்டுக் கதை கட்டி விட்டிருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்துவிட்டது. மக்கள் இதை எல்லாம் நம்பமாட்டார்கள் என அண்ணாதுரை பேசினார்.
அடம்பிடித்த தேவர்: 6-வ்து நாள் அதே கூட்டத்தில் முத்துராமலிங்க தேவர் அதே கூட்டத்தில் பேச வேண்டும். ஆனால் 5-வது நாளே மேடைக்குப் போகிறார் முத்துராமலிங்க தேவர். பிடி ராஜன், நீங்க பேசக்கூடாது என்கிறார். இல்லை நான் பேசுவேன்- மேடை நாகரீகத்தை இன்று நான் முறியடிக்கப் போகிறேன் என்று மேடையேறினார் முத்துராமலிங்க தேவர்.
அண்ணாதுரை தலைமறைவு: முத்துராமலிங்க தேவர் சொன்னார், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் யார் இங்கு வந்து உமையவளைப் பற்றி தப்பாகப் பேசியது? என கேட்கிறார். எல்லோரும் பம்முகிறார்கள். பிடி ராஜன் வாயில் இருந்து வார்த்தையே வரவில்லை. அண்ணாதுரையை மதுரைக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள். வெளியே போக முடியவில்லை.
ரத்த அபிஷேகம்: முத்துராமலிங்க தேவர் உக்கிரமாக இருக்கிறார். அப்போது முத்துராமலிங்க தேவர் சொல்கிறார், இன்னொரு முறை நான் கடவுளை நம்பமாட்டேன்; நான் கடவுள் இல்லை என்று சொல்லுபவன் கடவுளை நம்புகிறவர்களை பற்றி பேசினால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்திருக்கிறது. இன்னொரு முறை தமிழகத்தில் கடவுளை நம்பாதவர்கள், கடவுளை நம்பக் கூடியவர்களைப் பற்றி தவறாகப் பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்திலே அபிஷேகம் நடக்கும் என்று சொன்னார். அதன் பிறகு மன்னிப்பு கேட்டு ஓடிவந்த கும்பல்.. பிடி ராஜன், அண்ணாதுரை மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தவர்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார். இந்த பேச்சுதான் தற்போது அதிமுக தலைவர்களை கொந்தளிக்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications