திமுக அதிருப்தி வாக்குகள்.. பங்குக்கு வந்த தவெக.. அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்த வியூகம் என்ன?
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். திமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகளை அதிமுக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீரென தவெக களத்திற்கு வந்துள்ளதால், அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதலாக சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகி இருக்கிறது. பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தாலும், இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை.

திமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென நடிகர் விஜய்யின் தவெக திமுகவை கடுமையாக சாடி வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் திமுக மற்றும் பாஜகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்து வருகிறார். உள்ளூர் பிரச்சனைகளையும் விஜய் பேசத் தொடங்கி இருப்பதால், அவருக்கு இளைஞர்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல் திமுகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளும் தவெக பக்கம் சாயத் தொடங்கி இருக்கிறது. ஜெயலலிதா இருந்த போது மகளிரின் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகளவு கிடைத்த நிலையில், அதனை தவெக ஈர்க்க தொடங்கி இருக்கிறது. தவெகவின் முதல் தேர்தல் என்பதால், அத்தனை கட்சிகளுக்கும் பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
அதில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பின் மூலமாக ஜெயலலிதா தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று வந்தார். தற்போது ஜெயலலிதாவின் ஃபார்முலாவை விஜய் கையில் எடுத்துள்ளார். திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுக மட்டுமே அறுவடை செய்து வந்த நிலையில், தற்போது தவெகவும் பங்குக்கு வந்துள்ளது.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தவெகவுடன் அதிமுக தொடக்க நிலை பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் தொகுதி வாரியான சுற்றுப்பயணம் மூலமாக, இரு கட்சி தொண்டர்களிடையே ஓரளவிற்கு இணக்கம் ஏற்பட்டது.
இதன்பின் அடுத்தக் கட்டமாக பாஜக தரப்பில் மாநாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்து வருவதை அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் உணர்ந்துள்ளதால், தவெகவையும் சேர்த்து அட்டாக் செய்ய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
இதனை எடப்பாடி பழனிசாமி எப்படி கையாளப் போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது. ஏனென்றால் அதிமுகவை விஜய் பெரியளவில் சீண்டாத சூழலில், விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் களத்தில் அதிமுகவின் வாக்குகளை தவெக கைப்பற்றி வருவதால், வரும் காலங்களில் திட்டங்களை மாற்ற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications