அதிமுக தன்மானத்தை இழக்காது.. தங்கம் தென்னரசு சொன்ன கணக்கு.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக எப்போதும் தன்மானத்தை இழக்காது என்றும், திமுக மட்டுமே தங்களின் எதிரி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களின் கூட்டணி கணக்குகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்ற எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட் கணக்கை மட்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு பார்த்தால் போதும் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் இலவச லேப்டாப் திட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கையையும் கொடுத்தார். அதில், அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு எங்கோ ஒருவர் அமர்ந்து போட்டு கொண்டிருக்கிறார்.

உங்கள் மடியில் உள்ள கனத்தை பறித்து கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, கழித்தல் கணக்கிலும் ஏமாற மாட்டோம். கூட்டணி கணக்கிலும் ஏமாற மாட்டோம் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பட்ஜெட் மீதான அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிலுரையில் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. அதனை மறைத்து சதவிகித அடிப்படையில் நிதியமைச்சர் பதில் அளித்து கொண்டிருக்கிறார்.
73 ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ.5.18 லட்சம் கோடி. ஆனால் திமுக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.4.5 லட்சம் கோடி வாங்கி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த நிதி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவில் இருந்த நிபுணர்கள் கடந்த 4 ஆண்டுகளில் என்ன அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறார்கள்? அதன்படி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கடன் குறைந்திருக்கிறதா? என்று எதுவும் இல்லை.
அதேபோல் தமிழக அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடன் வாங்கியது மட்டுமே திமுக அரசின் சாதனை. புள்ளி விவரங்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதேபோல் பட்ஜெட் கணக்கை நிதியமைச்சர் பார்த்து கொண்டால் போதும். எங்களின் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்.
அதிமுகவுக்கு கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் வரும் போது அமைக்கப்படும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்போம். எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications