சசிகலா, ஓபிஎஸ் போனதால்தான் அதிமுகவுக்கு ஓட்டு சதவிகிதம் கூடியுள்ளது.. டேட்டாவுடன் வந்த எடப்பாடி
சென்னை: கடந்த லோக்சபா தேர்தலை விட அதிமுகவிற்கு ஒரு சதவிகிதம் வாக்கு அதிகரித்து இருக்கிறது என்றும், ஓ பன்னீர்செல்வம், சசிகலா பிரிந்ததால் தான் அந்த ஒரு சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசிகலாவும் ஒ பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றதால்தான் அதிமுக ஒரு சதவிகிதம் கூடுதலாக வாக்கு வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் பிரிந்து போனவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலாவும், ஓ பன்னீர் செல்வமும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அதெல்லாம் முடிந்து போனது. அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
வேண்டும் என்றே திட்டமிட்டு எதிரிகளுடன் சேர்ந்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.1 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. அவர்கள் எல்லாம் பிரிந்து போனதால்தான் ஒரு சதவிகிதம் கூடுதலாக வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது.
தேர்தல் முடிவுக்கு பிறகு அறிக்கை வெளியிட்ட சசிகலா, "ஜெயலலிதாவால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன். கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன்.
ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் அதிமுக இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும். திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும்" என்று கூறியிருந்தார்.
அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அதற்காக எந்த தியாகத்திற்கும் தயார் எனவும் பேசியிருந்தார். இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்படி பழனிசாமி, இதெல்லாம் முடிந்து போனது. அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications