நடுவானில் அலறிய 152 பயணிகள்.. திடீரென பெங்களூருக்கு யூடர்ன் அடித்த சென்னை விமானம்! என்ன பிரச்சனை?
சென்னை: நேற்றிரவு டெல்லியிலிருந்து சென்னைக்கு 152 பயணிகளுடன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், சென்னைக்கு வந்தும் தரையிறங்காமல், பெங்களூரில் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று இரவு 152 பயணிகளுடன் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து புறப்பட்டது. மாலை 6 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம், இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். தரையிறங்க சென்னை வந்த விமானம் சுமார் 30 நிமிடங்கள் வரை வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

பின்னர் அங்கிருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கு தரையிறங்கியது. 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய பயணிகள் சுமார் 11.30 மணியளவில் பெங்களூரில் தரையிறங்கினர். இதற்கான காரணம் என்ன? ஏன் விமானம் சென்னையில் தரையிறங்காமல் பெஙகளூருக்கு திருப்பிவிடப்பட்டது? விமானத்தில் கோளாறா? தரையிறங்கும் போது தொழில்நுட்ப பிரச்சனை ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த எந்த தகவல்களும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
அதேபோல சென்னையிலிருந்து நேற்று இரவு 9:40 மணியளவில் டெல்லிக்கு புறப்பட இருந்த விமானம், சுமார் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு 160 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனால் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 300க்கும் அதிகமான பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் சோஷியல் மீடியாக்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தாங்களை ஏன் சென்னையில் இறக்காமல், பெங்களூரில் தரையிறக்கினார்கள் என்பது குறித்து விளக்கமளிக்க கோரியுள்ள அவர்கள், எதிர்காலத்தில் விமான பயணங்கள் மீது நம்பிக்கையை அதிகரிக்க உரிய விளக்கம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications