புயல் கடந்த பின்னரும் தொடரும் பாதிப்பு.. விமான சேவைகள் தொடர்ந்து பாதிப்பு! மேலும் 6 விமானங்கள் ரத்து
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக விமான சேவை இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது.

இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்ட நிலையில் டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவு முதல் 10ம் தேதி அதிகாலை வரை சென்னையையொட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காற்றின் வேகம்
அதன்படி நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. 12 கி.மீ வேகத்தில் கரையை கடந்த மாண்டஸ் புயல், பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதாவது புயலின் கண் பகுதி கரையை கடக்கும்போது பெரும் சேதம் ஏற்படவில்லையென்றாலும் கூட அதனுடைய வால் பகுதி கரையை கடக்கும்போது சுமார் 65-85 கி.மீ வரை காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சரிந்துள்ளன. சென்னை மாநகராட்சி உள்ள 15 மண்டலங்களில், மண்டலத்திற்கு தலா 25-30 மரங்கள் என மொத்தம் 350 மரங்கள் சாய்ந்துள்ளன. இதனை அகற்றும் பணியில் 5,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில், பலத்த காற்று காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, ஷீரடி மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் என 8 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து கொச்சி, கோழிக்கோடு, ஹைதராபாத் என மொத்தம் 27 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையிலிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் 6 பன்னாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.