அஜித் குமார் கொலை வழக்கை.. சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது.. கோர்ட்டில் தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என்று தமிழக அரசு வாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வைத்துள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு அதிகாரபூர்வ நிலைப்பாடு எடுத்துள்ளது. சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என என்ஓசி தாக்கல் செய்ய கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒரு வழக்கு என்னுடைய வழக்காக இருந்தால், நான் வழக்கில் முடிவு செய்யாமல் அதில் இருந்து விலகியிருப்பேன். அரசும் அப்படித்தான். இது போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் இப்படி கேட்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், எழுத்தறிவு விகிதம் மிகக் குறைவாக உள்ள வட மாநிலங்களில் இதுபோன்ற விஷயங்கள் நடப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் தமிழ்நாட்டில், இதற்கும், அதற்கும், எல்லாவற்றுக்கும் நாங்கள் முன்னோடிகள் என்று எப்போதும் சொல்லிக் கொள்கிறோம். இதுபோன்ற விஷயங்களை இங்கே அனுமதிக்க முடியாது. அது ஆபத்தானது, என்றும் நீதிபதிகள் கடிந்துள்ளனர்.
வழக்கு விசாரணை
இன்று மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜர் ஆகி வாக்குமூலம் கொடுத்தனர். அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார்.
இதில் நீதிபதிகள் தமிழக அரசுக்கும் , போலீசாருக்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதில், அஜித் குமார் கொலை வழக்கை உணர்வுப் பூர்வமாக எடுத்து, சிபிசிஐடியின் சிறப்புக் குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். காரணமான உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை.
அஜித் குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார் வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் அங்கு இருந்தனர்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பு, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று கூறியது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம.
வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது . கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது என்று நீதிபதிகள் விமர்சனம் வைத்தனர்.
வழக்கு பின்னணி
சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவலர்கள் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது












Click it and Unblock the Notifications