Ajith: தமிழகத்தில் மாற்றம் தேவையில்லைனு அஜித் சொன்னது நல்ல கருத்துதான்! நன்றி சொன்ன ஸ்டாலின்
சென்னை: மாற்றம் தேவையில்லை என அஜித் நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார், அவருக்கு எனது நன்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அஜித் அது போன்று தெரிவிக்கவே இல்லை என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எஸ்ஐஇடி கல்லூரியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழ்நாடு வெல்லும். தமிழக வளர்ச்சிக்கு தவறாமல் வாக்களியுங்கள், நீங்கள் அளிக்க போவது வாக்கு மட்டும் அல்ல, தமிழகத்தை காக்கும் கேடயம் என்றார்.

மேலும் "அஜித்திடம் இந்த தேர்தலில் மாற்றம் வேண்டுமா" என கேட்டதற்கு அவர் மாற்றம் தேவையில்லை என பதில் அளித்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் முதல்வரிடம் கேட்டனர். அதற்கு அவர் "அஜித் நல்ல கருத்துதானே சொல்லியிருக்கிறார், அவருக்கு நன்றி" என்றார்.
ஆனால் மாற்றம் தேவையில்லை என்ற கருத்தை அஜித் சொல்லவில்லை என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த தகவல்கள் தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "நடிகர் அஜித்குமார் 'No Need to Change' என்று எதுவும் கூறவில்லை. அவர் அப்படியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது செய்தியாளர் ஒருவர் அஜித்திடம் மைக்கை நீட்டி தமிழகத்தில் மாற்றம் தேவையா என கேட்டதாகவும் அதற்கு அஜித் பேட்டி வேண்டாம் என்பதைதான் தேவையில்லை என கூறியிருந்தார் என்றும் சுரேஷ் சந்திரா விளக்கியுள்ளார். முதல்வரும் செய்தியாளர் அஜித் சொன்னதாக கூறியதற்குத்தான் நல்ல கருத்து என பதில் அளித்தார்.
கடந்த பல வருடங்களாக திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகர் அஜித், அதற்கு இணையாக தற்போது சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மேலும், கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்காக அவர் தற்போது வெளிநாடுகளில் அதிக நேரம் செலவழித்து வருகிறார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்காக நேற்று அதிகாலை சென்னைக்கு வந்திருந்தார். சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஆனால் காலை 6.40 மணிக்கே தனது மனைவி ஷாலினியுடன் வெள்ளை நிற கோட் சூட் போட்டு வந்த அஜித், பொது மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்கவும் அவர் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே காத்திருந்து வாக்களித்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக அவர் வாக்களித்தார்.
அதன் பின்னர் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது குறித்த சின்னம் அங்கிருந்த திரையில் வருவதை சரிபார்க்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னார். இதையடுத்து அதையும் அஜித் சரிபார்த்துவிட்டு, சென்றார்.
இந்த நிலையில் அஜித் செய்தியாளர்களை சந்தித்த போது மாற்றம் வருமா என்ற கேள்விக்கு மாற்றம் தேவையில்லை என அவர் பதிலளித்ததாக ஒரு தகவல் வெளியானது. மாற்றம் தேவையில்லை என்றால் அஜித் என்ன சொல்ல வருகிறார், எதை வேண்டாம் என்கிறார் என்ற அர்த்தத்தில் வருகிறது. இதனால் அவர் சொன்னதாக இந்த கருத்து வைரலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications