மைனர் கணவராக இருந்தாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தரணும்.. 15 வயசிலேயே அப்பா ஆன பையனுக்கு ஹைகோர்ட் நச்
சென்னை: விவாகரத்து பெற்ற கணவருக்கு வேலை இல்லாவிட்டாலும், முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதேபோல, மனைவிக்கு அதிக வருமானம் இருந்தால், அந்த வசதியான மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியமில்லை என்று மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது. இந்நிலையில், மைனர் கணவராக இருந்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டுமா? என்பது குறித்து தற்போது அலகாபாத் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. அது என்ன?
கணவர் மைனராக இருந்தாலும் கூட, அவர் தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அபிஷேக் சிங் சவுகான் என்பவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு, வெறும் 13 வயதுதான் ஆகியிருந்தது.. அந்த 13 வயதிலேயே, இளம்பெண் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார்.. தன்னுடைய 15 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆனார்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள்.. தினமும் தகராறு வெடித்து வந்த நிலையில், தம்பதி இருவருமே அடுத்த 2 வருடங்களில் பிரிந்துவிட்டனர்..
ஜீவனாம்சம் - பராமரிப்பு தொகை
இந்நிலையில் கடந்த 2019ல் பிரிந்து சென்ற மனைவி ஜீவனாம்சம் கோரி பரேலி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் பராமரிப்பு தேவை என்றும் கேட்டுக் கொண்டார். மனைவி இந்த ஜீவனாம்சத்தை கோரும்போது, அபிஷேக்கிற்கு வயது 16 ஆகியிருந்தது.
இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றமும், அபிஷேக் சிங் யாதவ், விண்ணப்பித்த நாளிலிருந்து மாதா மாதமும் மனைவிக்கு ரூ.5,000, பெற்ற மகளுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது... ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, அபிஷேக் அலகாபாத் ஹைகோர்ட்டுக்கு அப்பீலுக்கு சென்றார்..
பிறப்பு சான்றிதழ்
இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், "கல்யாணம் செய்துகொண்டபோதும் சரி, ஜீவனாம்சம் மனு தாக்கல் செய்யப்பட்டபோதும்சரி, தான் ஒரு மைனர்" என்று தெரிவித்தார்.. அத்துடன் தன்னுடைய பள்ளிச்சான்றிதழையும், பிறப்பு சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்..
மேலும், அபிஷேக் தரப்பில் வழக்கறிஞர் வாதிடும்போது, கல்யாணத்தின்போது அபிஷேக்கிற்கு 13 வயது, விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கியபோது 16 வயதுதான் ஆகியிருந்தது.. எனவே அபிஷேக் சிங் யாதவ், பாதுகாவலரை குற்றம் சாட்டாமல் ஒரு மைனர் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது..
மைனர் என்றால் பொறுப்பில்லையா
அதுமட்டுமல்லாமல் அபிஷேக்கின் மனைவி போதுமான காரணமின்றி அவரை விட்டு விலகி சென்றுவிட்டார்.. அப்படியிருக்கும்போது எப்படி ஜீவனாம்சம் தர முடியும்? எனவே ஜீவனாம்சம் கோருவதில் இருந்து அவரை விலக்கிவிட்டார் என்ற வாதத்தை முன்வைத்தார். .
இதையடுத்து, மனைவியின் வழக்கறிஞரும் தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.. அதில், ஒரு கணவர் தன்னுடைய மனைவி, மைனர் குழந்தை மீதான தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.. இதை அரசும் தட்டிக்கழிக்க முடியாது..
அந்தக் குடும்பத்திற்கு விவசாய நிலம், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு கார் இருந்துள்ளது. ஆனால், வரதட்சணை கொடுமை காரணமாக பாதிக்கப்பட்ட மனைவி , கணவனின் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. தம்பதி பிரிவுக்கு இதுதான் காரணம் என்று வாதிட்டார்.
நீதிபதி தந்த உத்தரவு இதுதான்
மேற்கண்ட இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதன் பால் சிங்கின் அமர்வு, பிரிவு 125 குற்றவியல் நடைமுறைச் சட்டம், மைனர் கணவருக்கு எதிரான நடவடிக்கைகளை தடை செய்யவில்லை.
ஒரு மைனர் தன்னுடைய பெற்றோரை சார்ந்து இருக்கிறாரா என்பதை கோர்ட் சந்தேகிக்கிறது, மேலும் தன்னையோ அல்லது மற்றவர்களையோ ஆதரிக்க போதுமான வழிகள் இருப்பதாக கருதவும் முடியாது. எனினும், கணவர் உரிய வயது வந்தவுடன், தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
மைனர் கணவர் மனைவிக்கு ஜீவனாம்சம்
குழந்தை திருமண வழக்குகளில்கூட, ஒரு மைனர் கணவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
மனைவி ஜீவனாம்சம் கோரும்போது மைனராக இருந்த ஒரு கணவரை அந்த காலத்திற்கு உதவித்தொகை செலுத்த கட்டாயப்படுத்த முடியாது.. ஆனால், கணவர் 18 வயதை எட்டியதும் பொறுப்பாக கருதப்படுவார் என்பதால், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு, மனைவிக்கு பராமரிப்பு வழங்க வேண்டும்.
அந்தவகையில், நிகர வருமானத்தில் 25 சதவீதமாக பராமரிப்பு தொகையை சுப்ரீம் கோர்ட்டின் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பயன்படுத்துவதன் மூலம், மனைவிக்கு மாதம் ரூ.2,500 மற்றும் மகளுக்கு ரூ.2,000 என உதவித்தொகையை வழங்கவேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications